இன்றைய காலத்தில் யுபிஐ (UPI) பணப்பரிவர்த்தனை மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. பணம் அனுப்பவும் பெறவும் வங்கிக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லாமல், மொபைல் போன் மூலமாகவே உடனடியாக பரிவர்த்தனை செய்ய முடிகிறது. சிறிய செலவுகளிலிருந்து பெரிய தொகை பரிவர்த்தனை வரை யுபிஐ பயன்பாடு எளிதாகவும், பாதுகாப்பாகவும், நேரம் மிச்சப்படுத்துவதாகவும் உள்ளது.
அவசரத்தில் பணம் அனுப்பும் போது தவறான செல்போன் எண், தவறான யுபிஐ ஐடி அல்லது ஒரு பூஜ்ஜியம் கூடுதலாக டைப் செய்துவிட்டால், குறைந்த தொகை அதிகமாக அனுப்பப்படும் அபாயம் உள்ளது. இப்படி தவறுதலாக யுபிஐ மூலம் பணம் அனுப்பிவிட்டால், அந்த பணத்தை திரும்ப பெற முடியுமா என்ற கேள்வி பலருக்கும் எழுகிறது.
முதலில் நினைவில் கொள்ள வேண்டிய முக்கிய விஷயம் என்னவென்றால், பணம் அனுப்பும் முன் யுபிஐ ஐடி, செல்போன் எண், பெறுநரின் பெயர் ஆகியவற்றை இருமுறை சரிபார்ப்பது மிகவும் அவசியம். QR கோடு ஸ்கேன் செய்யும் போதும், காட்டப்படும் பெயரை உறுதி செய்து கொள்வது நல்லது.
எதிர்பாராத விதமாக தவறு நடந்துவிட்டால், முதலில் பணம் சென்ற நபரை நேரடியாக தொடர்பு கொண்டு, தவறுதலாக அனுப்பியதாக விளக்கி பணத்தை திரும்ப அனுப்புமாறு கேட்டுக்கொள்ளலாம். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அவர்கள் புரிந்து கொண்டு பணத்தை திருப்பி அனுப்புவார்கள்.
ஒருவேளை அந்த நபரை தொடர்பு கொள்ள முடியவில்லையோ அல்லது அவர் பணம் தர மறுத்தாலோ, அடுத்த கட்டமாக நீங்கள் பயன்படுத்திய யுபிஐ செயலியில் புகார் அளிக்கலாம்.
கூகுள் பே, போன் பே, பேடிஎம் போன்ற செயலிகளில் அந்த பரிவர்த்தனையை தேர்வு செய்து “Get Help”, “Report a problem” போன்ற விருப்பங்கள் மூலம் தவறான நம்பருக்கு பணம் அனுப்பியதாக புகார் பதிவு செய்யலாம். சில செயலிகளில் கஸ்டமர் கேர் மூலம் பேசும் வசதியும் உள்ளது.
இதிலும் தீர்வு கிடைக்கவில்லை என்றால், நீங்கள் எந்த வங்கி கணக்கிலிருந்து பணம் அனுப்பினீர்களோ அந்த வங்கியை நேரடியாக அணுகி புகார் அளிக்கலாம். புகார் அளிக்கும் போது யுபிஐ டிரான்ஸாக்ஷன் ஐடி, பணம் அனுப்பிய தேதி மற்றும் நேரம், தவறாக அனுப்பிய யுபிஐ ஐடி அல்லது செல்போன் எண் உள்ளிட்ட முழு விவரங்களையும் தெளிவாக குறிப்பிட வேண்டும்.
வங்கி மற்றும் யுபிஐ செயலி இரண்டிலும் தீர்வு கிடைக்காத பட்சத்தில், கடைசி வழியாக NPCI வாடிக்கையாளர் சேவை இணையதளத்தில் புகார் அளிக்கலாம். www.npci.org.in என்ற இணையதளத்தில் பரிவர்த்தனை விவரங்களை பதிவு செய்து நிவாரணம் கோர முடியும்.
