ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் சிலுவுரு கிராமத்தைச் சேர்ந்தவர் லோகம் சிவநாகராஜு. இவரது மனைவி லட்சுமி மாதுரி, கோபி என்பவருடன் தகாத உறவில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த உறவுக்கு கணவர் சிவநாகராஜு தடையாக இருந்ததால், அவரை கொலை செய்ய மாதுரி திட்டமிட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
அதன்படி, கடந்த ஜனவரி 18ஆம் தேதி இரவு மாதுரி உணவாக பிரியாணி தயாரித்து, அதில் 20 தூக்க மாத்திரைகளை பொடித்து கலந்து தனது கணவருக்கு கொடுத்துள்ளார். பிரியாணி சாப்பிட்ட சிவநாகராஜு மயக்கமடைந்த நிலையில், மாதுரி தனது காதலன் கோபியை வீட்டிற்கு வரவழைத்துள்ளார். பின்னர் இருவரும் சேர்ந்து தலையணையால் சிவநாகராஜுவின் முகத்தை அழுத்தி மூச்சுத்திணறச் செய்து அவரை கொலை செய்துள்ளனர்.
கொலைக்குப் பிறகு, தனது கணவர் மாரடைப்பால் உயிரிழந்ததாக உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினரிடம் மாதுரி நாடகமாடியுள்ளார். ஆனால் சிவநாகராஜுவின் உடலில் காயங்கள் மற்றும் இரத்தக் கறைகள் இருந்ததை கவனித்த உறவினர்களுக்கு சந்தேகம் எழுந்தது. இதையடுத்து அவர்கள் போலீசில் புகார் அளித்தனர்.
பிரேதப் பரிசோதனை அறிக்கையில், சிவநாகராஜு மூச்சுத்திணறச் செய்து கொல்லப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. கொலைக்குப் பிறகு மாதுரி சடலத்தின் அருகில் அமர்ந்து ஆபாசப் படங்களை பார்த்ததாக சில தகவல்கள் வெளியானாலும், அவற்றை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மறுத்துள்ளார்.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக மனைவி லட்சுமி மாதுரி மற்றும் அவரது காதலன் கோபி ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
