உத்தரபிரதேசத்தில், தான் சமைத்த முட்டை குழம்பு சுவையாக இல்லை என்று கணவர் கூறியதால், அவரது நாக்கை கடித்து துண்டாக்கிய மனைவியின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த விபின் குமார் என்பவருக்கும், இஷா என்பவருக்கும் ஆறு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு இருவருக்கும் அடிக்கடி கருத்து வேறுபாடு மற்றும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
சம்பவத்தன்று, இஷா சமைத்த முட்டை குழம்பு சுவையாக இல்லை என்று விபின் குமார் குறை கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இஷா, கணவருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றிய நிலையில், இஷா விபின் குமரின் நாக்கை கடித்து துண்டாக்கியதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தில் விபின் குமரின் நாக்கு சுமார் 2.5 செ.மீ அளவுக்கு துண்டிக்கப்பட்டுள்ளது. அவரை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டாலும், துண்டிக்கப்பட்ட நாக்கைப் மீண்டும் ஒட்ட வைக்க முடியாது என மருத்துவர்கள் தெரிவித்தனர். இதன் காரணமாக விபின் குமார் தற்போது பேச முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார், இஷாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
