Monday, January 26, 2026

சென்னையில் புல்லட் வாகனங்களை குறிவைத்து பேட்டரிகளை திருடும் மர்ம நபர்கள்

சென்னை, ராமாபுரம் பாரதியார் தெருவைச் சேர்ந்த நாகபிரபு (38) என்பவர், அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். பொங்கல் திருநாளை முன்னிட்டு நேற்று அவர் குடும்பத்துடன் காரில் வெளியே சென்றிருந்தார். பின்னர் வீட்டிற்கு திரும்பியபோது, நிறுத்தி வைத்திருந்த அவரது புல்லட் இருசக்கர வாகனத்தின் ஒரு பகுதி உடைந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அருகில் சென்று பார்த்தபோது, வண்டியில் இருந்த பேட்டரி திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து, வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, தலையில் ஹெல்மெட் அணிந்திருந்த மர்ம நபர் ஒருவர் சாவகாசமாக நடந்து வந்து வண்டியை உடைத்து பேட்டரியை எடுத்துச் சென்றது பதிவாகி இருந்தது. உடனடியாக நாகபிரபு அந்த சிசிடிவி காட்சிகளுடன் ராமாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

ராமாபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் புல்லட் வாகனங்களை குறிவைத்து பேட்டரி திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இருசக்கர வாகன பேட்டரி திருட்டு என்பதால், காவல்துறை இதுபோன்ற சம்பவங்களை அலட்சியமாக கண்டு கொள்வதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே, தொடர் திருட்டில் ஈடுபட்டு வரும் மர்ம நபர்களை கண்டறிந்து கைது செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் காவல்துறையிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related News

Latest News