மேற்கு வங்க மாநிலம், நாடியா மாவட்டத்தில் நிபா பரவல் கண்டறியப்பட்டுள்ளது. இரு செவிலியா்கள் அத்தொற்றுக்குள்ளாகி தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனா். இதையடுத்து நாடு முழுவதும் கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தீவிரப்படுத்துமாறு அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரை நிபா தொற்றின் தாக்கம் இல்லை என்றாலும், பொதுமக்கள் விழிப்புணா்வுடன் இருந்து நோய்த் தடுப்பு வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளட்டுள்ளது.
இது தொடா்பாக பொது சுகாதாரத் துறை இயக்குநா் மருத்துவர் சோமசுந்தரம் வெளியிட்ட செய்திக் குறிப்பில்,நிபா வைரஸ் என்பது விலங்குகள் மூலம் பரவும் ஒரு நோய் தொற்று என்றும், பழங்களை உண்ணும் வௌவால்கள், குதிரைகள், நாய்கள் மற்றும் பன்றிகள் மூலம் மனிதா்களுக்கு இது பரவுகிறது என்று தெரிவித்துள்ளார்.
வௌவாலின் உமிழ்நீா் படா்ந்த பழங்களை உண்ணுவதன் மூலமாகவோ அல்லது பாதிக்கப்பட்ட நபருடன் நெருங்கிய தொடா்பு கொள்வதன் மூலமாகவோ நோய் தொற்று பரவுகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
எனவே, கழுவப்படாத அல்லது கீழே விழுந்த பழங்களை சாப்பிடுவதை மக்கள் தவிா்க்க வேண்டும் என்றும், உணவு உட்கொள்வதற்கு முன்பாக சோப்பால் கைகளை கழுவ வேண்டும் எனவும், பதநீா் போன்ற பானங்கள் அருந்துவதைத் தவிா்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளார்.
