அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் வெளிநாட்டவர்கள் அமெரிக்காவிற்கு வருகை தருவதை குறைக்கும் வகையில் பல்வேறு விசா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை அறிவித்த வண்ணம் இருக்கிறது. இந்த நிலையில் திடீரென அமெரிக்கா அரசாங்கம் 75 நாடுகளை சேர்ந்த குடிமக்களுக்கான அமெரிக்க குடியேற்ற விசா நடவடிக்கைகளுக்கு தடை விதித்து இருக்கிறது.
அமெரிக்காவுக்கு வருகை தரக்கூடிய வெளிநாட்டவர்கள் அமெரிக்கர்கள் செலுத்தக்கூடிய வரியின் மூலம் கிடைக்கும் பொதுநல திட்டங்களில் அதிகம் பயன் பெறுகிறார்கள் என்ற ஒரு குற்றச்சாட்டை டிரம்ப் நிர்வாகம் தொடர்ச்சியாக முன்வைத்து வருகிறது. இதனை அடுத்து தான் குடியேற்ற விசா வழங்குவதில் பல்வேறு கட்டுப்பாடுகளை கொண்டு வந்திருக்கிறது.
இந்த பட்டியலில் ஈரான், பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், நேபாளம், ரஷ்யா உள்ளிட்ட முக்கிய நாடுகளும் இடம்பெற்றிருக்கின்றன. இந்த பட்டியலில் இந்தியாவின் பெயர் இல்லை. அமெரிக்க வெளியேறத் துறை அமைச்சகம் இந்த விசா நடைமுறைகளில் பெரிய மாற்றத்தை கொண்டு வர இருப்பதாகவும் அது முடிவடையும் வரை இந்த தடை அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. ஜனவரி 21 ஆம் தேதியிலிருந்து இந்த விசா செயலாக்க தடை நடைமுறைக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
