’சூது கவ்வும்’ படத்தை இயக்கிய இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி, கிரித்தி ஷெட்டி, ராஜ்கிரண், சத்யராஜ், ஆனந்த்ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘வா வாத்தியார்’. ஸ்டுடியோ கிரீன் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த படம் கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் ரிலீஸ் தேதி தள்ளிப் போய் கொண்டே இருந்தது. பல தடைகளை தாண்டி ஒரு வழியாக ‘வா வாத்தியார்’ திரைப்படம் இன்று ரிலீஸானது.
வா வாத்தியார் படம் எப்படி இருக்கிறது? – விமர்சனம்
1987-ல் நடக்கும் இந்த கதையின் மையக் கதை எம்.ஜி.ஆர் ரசிகர் ராஜ்கிரணின் வாழ்க்கையைச் சுற்றியே வருகிறது. ராஜ்கிரண் எம்.ஜி.ஆரின் மறைவால் மிகவும் அதிர்ச்சி அடைகிறார். அந்தக் காலத்தில் அவருக்கு பேரன் பிறக்கிறான். தனது பேரன்தான் அடுத்த எம்.ஜி.ஆர் என்று எண்ணிய ராஜ்கிரண், குழந்தையை அவரது குணங்களுடன் வளர்க்க தொடங்குகிறார்.
முதலில் கார்த்திக் எம்.ஜி.ஆர் மாதிரி வளர, பிறகு ஒரு கட்டத்தில் நம்பியாரை இன்ஸ்பியர் ஆக்கி, தவறான வேலைகள் எல்லாம் செய்து போலீசாகிறார். லஞ்சம் வாங்கும் போலீஸ் இன்ஸ்பெக்டராகவும், சமூக அமைப்பில் சிலச் சவால்களை எதிர்கொள்ளும் பணிகளில் ஈடுபடுகிறார். குறிப்பாக, சமூக வலைதளங்களில் ‘மஞ்சள் முகம்’ என்ற பெயரில் அரசின் போலி முகத்திரையை கிழித்து வரும் சில இளைஞர்களை ‘என்கவுண்டர்’ செய்ய காவல்துறை திட்டமிடும் போது, கார்த்தியும் இதற்குள் இணைந்து செயல்படுகிறார்.
கார்த்தியின் உண்மையான முகம் வெளிப்படும் போது, ராஜ்கிரண் கவலையில் இறந்துபோகிறார். இதன் பின்னர் யாரும் எதிர்பாராத பல திருப்பங்கள் அவரது வாழ்க்கையில் நிகழும் சம்பவங்கள்தான் படத்தின் மீதிக்கதை.
ராஜ்கிரண், சத்யராஜ், நிழல்கள் ரவி ஆகியோரின் அனுபவ நடிப்பு கதைக்கு வலுவை சேர்க்கிறது. ஷில்பா மஞ்சுநாத், ரமேஷ் திலக், கருணாகரன், ஆனந்தராஜ், ஜி.எம்.சுந்தர், பி.எல்.தேனப்பன், வித்யா போன்றோர் சிறிய கதாபாத்திரங்களில் நடித்தாலும் கவனம் ஈர்க்கின்றனர்.
சந்தோஷ் நாராயணனின் இசை படத்திற்கு மேலும் பலம் சேர்த்துள்ளது. படத்தின் முதல் பாதி பரபரப்பாக செல்கிறது. அந்த பரபரப்பு இரண்டாம் பாதியில் கொஞ்சம் குறைவாக உள்ளது. படத்தில் சில லாஜிக் மீறல்கள் இருந்தாலும் படத்தின் திரைக்கதையை ரசிக்கும் படியாக அமைந்துள்ளது.
