மத்திய பிரதேச மாநிலம், போபாலில் ஓய்வுபெற்ற இந்திய ரயில்வே ஊழியர்களுக்கு நினைவுப் பரிசாக வழங்கப்பட்ட வெள்ளி நாணயங்கள் போலியானவை என நிரூபிக்கப்பட்டுள்ளது.
போபாலில் மேற்கு மத்திய ரயில்வேயில் (WCR) பணியாற்றி ஓய்வு பெற்ற சில ஊழியர்களுக்கு, அவர்களின் சேவையை கௌரவிக்கும் வகையில் வெள்ளி நாணயங்கள் பரிசாக வழங்கப்பட்டன. பின்னர் அந்த நாணயங்களை விற்க முடிவு செய்த போது, அவை உண்மையான வெள்ளி அல்ல என்பது தெரிய வந்துள்ளது.
நாணயங்களை ஆய்வு செய்ததில், அதில் வெறும் 0.23 சதவீதம் மட்டுமே வெள்ளி இருப்பதும், மீதமுள்ள பகுதி செம்பாக இருப்பதும் கண்டறியப்பட்டது. இதனால் ஓய்வுபெற்ற ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து ஓய்வுபெற்ற அதிகாரி ஒருவர் கூறுகையில், “இது நினைவுப் பரிசு என்று நாங்கள் நம்பினோம். ஆனால் அது செம்பு என்று தெரிய வந்ததும், நாங்கள் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்தோம். இது மிகுந்த அவமானமாக உள்ளது” என்று தெரிவித்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
