நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள பராசக்தி திரைப்படம் கடந்த 10ம் உலகம் முழுவதும் வெளியானது. சுதா கொங்காரா இயக்கிய இப்படத்தில் ரவி மோகன், அதர்வா முரளி, ஸ்ரீலீலா, பைசல் ஜோசப், சேத்தன், குரு சோமசுந்தரம் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படம் 1965ம் ஆண்டு நடந்த இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்டிருந்தது.
இந்த படத்தில் அப்போதைய காங்கிரஸ் அரசு பற்றியும், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பற்றியும் காட்சிகள் இடம் பெற்றிருந்தது. இதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் முதன்மை தலைவர் அருண் பாஸ்கர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
“பராசக்தி திரைப்படத்தில் வரலாற்றை வேண்டுமென்றே திரித்துக் காட்டியதற்கான கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன். காங்கிரஸ் தொண்டர்களே மற்றும் பொதுமக்களே கவனியுங்கள்!!! பராசக்தி திரைப்படம் கண்டிப்பாகத் தடை செய்யப்பட வேண்டிய ஒரு திரைப்படம்.
இத்திரைப்படம், சிவகார்த்திகேயன் இரும்புப் பெண்மணி இந்திரா காந்தியைச் சந்திப்பது போன்ற ஒரு கற்பனைக் காட்சியைக் சித்தரிக்கிறது, மேலும் அதில் அவர் ஒரு வில்லத்தனமான முறையில் பேசுவது போலக் காட்டப்பட்டுள்ளது.
வரலாற்றில் நடக்காத நிகழ்வுகளில், மறைந்த தேசியத் தலைவர்களைக் கற்பனையாகச் சித்தரிக்க சட்டத்தில் அனுமதி கிடையாது என்பதை இந்தப் படத்தை உருவாக்கிய முட்டாள் குழு அறியாதது போல் தெரிகிறது. அவர்கள் எந்த வரலாற்று ஆதாரமும் இல்லாத காட்சிகளைப் பொறுப்பற்ற முறையில் உருவாக்கியுள்ளனர்.
1965 பிப்ரவரி 12 அன்று இந்திரா காந்தி கோவைக்கு வருகை தந்ததாக இத்திரைப்படம் தவறாகக் காட்டுகிறது. உண்மையில் அப்படி ஒரு வருகை நிகழவே இல்லை. பின்னர், அவர் முன்னிலையில் ஒரு ரயில் எரிக்கப்படுவது போன்ற காட்சிகளைப் புனைந்து, இந்தித் திணிப்புக்கு எதிராக அவர் கையெழுத்துகளைப் பெறுவது போலச் சித்தரிக்கிறது. இந்த நிகழ்வுகளில் எதுவும் வரலாற்றில் நடக்கவில்லை, அவற்றைச் சித்தரிப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.
இது தவிர, காங்கிரஸ் கொடியை எரிப்பது போன்ற காட்சிகளும் படத்தில் வலுக்கட்டாயமாகச் சேர்க்கப்பட்டுள்ளன. பராசக்தி திரைப்படத்தில் வரலாற்றில் நடக்காத நிகழ்வுகளைச் சித்தரிக்கும் அனைத்துக் காட்சிகளும் உடனடியாக நீக்கப்பட வேண்டும். திரைப்படத்தின் தயாரிப்புக் குழு பொது மன்னிப்புக் கோர வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

