தேசிய நெடுஞ்சாலைகளில் தினமும் பயணம் செய்யும் லட்சக்கணக்கான வாகன ஓட்டிகளுக்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வரும் பிப்ரவரி 1, 2026 முதல், புதிய கார், ஜீப் மற்றும் வேன் வகை வாகனங்களுக்கு பாஸ்டேக் வழங்கும்போது இதுவரை நடைமுறையில் இருந்த KYC (Know Your Customer) சரிபார்ப்பு முறை ரத்து செய்யப்படுகிறது.
இதுவரை பாஸ்டேக் வாங்கும் போது KYC சரிபார்ப்பு கட்டாயமாக இருந்தது. இதனால் பாஸ்டேக் வாங்கிய பிறகும் அது செயல்படுத்தப்படுவதற்கு பல மணி நேரங்கள் அல்லது சில நேரங்களில் நாட்கள்கூட ஆகும் நிலை இருந்தது. இதன் காரணமாக வாகன உரிமையாளர்கள் டோல் பிளாசாக்களில் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய சிரமத்தை சந்தித்து வந்தனர்.
புதிய நடைமுறையின் படி, பிப்ரவரி 1க்கு பிறகு வாங்கப்படும் பாஸ்டேக்-களுக்கு தனியான KYC சரிபார்ப்பு காலம் இருக்காது. வங்கிகள் முதலில் வாகனத்தின் விவரங்களை அரசு வாகன தரவுத்தளத்தில் சரிபார்க்கும். அந்த விவரங்கள் சரியாக இருந்தால், பாஸ்டேக் உடனடியாக செயல்படுத்தப்படும்.
தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் பாஸ்டேக் வைத்திருப்பவர்களுக்கும் இது ஒரு நல்ல செய்தியாகும். எந்தவித புகாரும் அல்லது தவறான பயன்பாடும் இல்லாத பாஸ்டேக்-களுக்கு மீண்டும் KYC சரிபார்ப்பு தேவையில்லை. தவறான வெளியீடு அல்லது தவறான பயன்பாடு கண்டறியப்பட்டால் மட்டுமே மீண்டும் சரிபார்ப்பு செய்யப்படும்.
எனினும், KYC நடைமுறை தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தாலும், வாகன உரிமையாளர்கள் தங்களின் பதிவு விவரங்கள் மற்றும் ஆவணங்கள் சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். ‘டிஜிட்டல் இந்தியா’ திட்டத்தின் ஒரு பகுதியாக தற்போது 98 சதவீத டோல் வசூல் பாஸ்டேக் மூலம் டிஜிட்டல் முறையில் நடைபெற்று வருகிறது. இந்த புதிய மாற்றம் நேரத்தையும் எரிபொருளையும் சேமித்து, நெடுஞ்சாலை போக்குவரத்தை மேலும் சீரமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
