டெல்லியில் வரும் 26ஆம் தேதி நடைபெற உள்ள குடியரசுத் தின விழாவை முன்னிட்டு, விமான சாகச நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. இந்த நிகழ்ச்சிகளின் போது பறவைகள் விமானங்களில் மோதி விபத்து ஏற்படாமல் தடுக்கும் வகையில், டெல்லி அரசு புதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்து வருகிறது.
அதன்படி, டெல்லி அரசின் வனவிலங்குத் துறை சார்பில் “இறைச்சி வீசும் திட்டம்” செயல்படுத்தப்பட உள்ளது. நகர்ப்புற பகுதிகளில் இருந்து கழுகு உள்ளிட்ட பெரிய பறவைகளை நகரத்துக்கு வெளியே உள்ள பகுதிகளுக்கு அவற்றை திசைதிருப்பும் நோக்கில் இந்தத் திட்டம் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, நகரின் வெளிப்புறங்களில் குறிப்பிட்ட இடங்களில் இறைச்சிகள் வீசப்பட உள்ளன.
இந்த திட்டத்திற்காக மொத்தமாக 1,275 கிலோ எலும்பில்லாத கோழி இறைச்சி வாங்கப்பட உள்ளதாகவும், இதற்கு சுமார் ரூ.4 லட்சத்து 46 ஆயிரம் செலவாகும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.
