Monday, January 12, 2026

“முதல்ல சுடுவோம்.. அப்புறம் பேசுவோம்!” – அமெரிக்காவுக்கு டென்மார்க் விடுத்த பகீர் எச்சரிக்கை!

உலக அரசியலில் இப்போது ஒரு மிகப்பெரிய பூகம்பம் வெடித்துள்ளது! இத்தனை காலமும் நெருங்கிய நண்பர்களாக இருந்த அமெரிக்காவும், டென்மார்க்கும் இப்போது போர்க்களத்தில் நேருக்கு நேர் மோதும் சூழல் உருவாகியுள்ளது. “கிரீன்லாந்து தீவை அமெரிக்கா ராணுவ பலத்தால் ஆக்கிரமிக்க முயன்றால், முதலில் சுடுவோம்.. அப்புறம் தான் பேசுவோம்” என டென்மார்க் விடுத்துள்ள எச்சரிக்கை, உலக நாடுகளை அதிர வைத்துள்ளது!

விஷயம் இதுதான்.. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், டென்மார்க் நாட்டுக்குச் சொந்தமான ‘கிரீன்லாந்து’ தீவை விலைக்கு வாங்கத் துடிக்கிறார். இது அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்புக்கு மிக முக்கியம் என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. “விலைக்குக் கொடுக்காவிட்டால் ராணுவத்தை இறக்கவும் தயங்கமாட்டோம்” என ட்ரம்ப்பின் செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் கூறியதுதான் இப்போது எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றியுள்ளது.

இதற்குப் பதிலடி கொடுத்துள்ள டென்மார்க் தற்காப்பு கமிட்டி தலைவர் ராஸ்மஸ் ஜார்லோவ், “கிரீன்லாந்து ஒன்றும் விற்பனைப் பொருள் கிடையாது. அங்கே வசிக்கும் 57,000 டென்மார்க் குடிமக்களை அமெரிக்கர்களாக மாறச் சொல்லி எங்களால் விற்க முடியாது. அமெரிக்கா தாக்குதல் நடத்தினால், எங்களிடம் பெரிய ராணுவம் இல்லாவிட்டாலும், எங்களை நாங்கள் தற்காத்துக் கொள்வோம். இது ஒரு மிகப்பெரிய முட்டாள்தனமான போராக அமையும்” எனச் சாடியுள்ளார்.

இன்னொரு பக்கம் டென்மார்க் பிரதமர் மெட்டே ஃப்ரெட்ரிக்சன் விடுத்துள்ள எச்சரிக்கைதான் ஹைலைட்! “அமெரிக்கா ஒருவேளைத் தாக்கினால், அது 76 ஆண்டுகால நேட்டோ (NATO) அமைப்பின் முடிவாக அமையும். ஏனென்றால், நேட்டோ விதி எண் 5-ன் படி, ஒரு நட்பு நாட்டை அமெரிக்கா தாக்கினால், அமெரிக்காவே அமெரிக்காவை எதிர்த்துப் போரிட வேண்டிய விசித்திரமான சூழல் உருவாகும். இது நேட்டோவை வேரோடு அழித்துவிடும்” எனக் கறாராகச் சொல்லியிருக்கிறார்.

நிலைமை இப்படி இருக்க, அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, அடுத்த வாரம் டென்மார்க் மற்றும் கிரீன்லாந்து அதிகாரிகளைச் சந்திக்கவுள்ளார். “நாங்கள் போரை விரும்பவில்லை, பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணவே விரும்புகிறோம்” என அவர் கூறியுள்ளதால், பதற்றம் சற்று குறைந்துள்ளது.

Related News

Latest News