இந்திய ரயில்வே, ஆன்லைன் ரயில் டிக்கெட் முன்பதிவு விதிகளை மேலும் கடுமையாக்கியுள்ளது. புதிய விதிகளின்படி, ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட மற்றும் சரிபார்க்கப்பட்ட IRCTC கணக்குகளுக்கு முன்பதிவில் முன்னுரிமை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிளாக் டிக்கெட் மற்றும் மோசடி முன்பதிவுகளைத் தடுக்கும் நோக்கத்தில் இந்த மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
இந்திய ரயில்வே அறிவிப்பின்படி, ஜனவரி 5ஆம் தேதி முதல் ஆதார் எண்ணுடன் சரிபார்க்கப்பட்ட IRCTC கணக்கு வைத்திருப்பவர்கள் மட்டுமே, முன்பதிவு தொடங்கும் நேரமான காலை 8 மணிக்கு டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும். ஆதார் இணைக்கப்படாத IRCTC கணக்குகளை வைத்திருப்பவர்கள் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்ய அனுமதிக்கப்படமாட்டார்கள். ஆனால், ஆதார் சரிபார்க்கப்பட்ட கணக்குகள் கொண்டவர்கள் காலை 8 மணி முதல் எந்த தடையும் இன்றி முன்பதிவு செய்யலாம்.
ஆதார் எண்ணை IRCTC கணக்குடன் இணைக்காதவர்களுக்கு, டிக்கெட் முன்பதிவில் மிக முக்கியமான நேரத்தை இழக்கும் நிலை ஏற்படும். பொதுவாக காலை நேரத்தில் தான் உறுதி செய்யப்பட்ட டிக்கெட்டுகள் கிடைக்கும் வாய்ப்பு அதிகம் இருப்பதால், ஆதார் இணைக்கப்படாத கணக்குகளில் இருந்து உறுதி செய்யப்பட்ட டிக்கெட் பெறுவது மிகவும் கடினமாகிவிடும்.
மேலும், ஜனவரி 12ஆம் தேதிக்குப் பிறகு விதிகள் இன்னும் கடுமையாக்கப்படும் என இந்திய ரயில்வே தெளிவுபடுத்தியுள்ளது. ஜனவரி 11ஆம் தேதி வரை மட்டுமே ஆதார் இணைக்கப்படாத IRCTC கணக்குகள் குறிப்பிட்ட நேரத்தில் டிக்கெட் முன்பதிவு செய்ய அனுமதிக்கப்படுவார்கள். ஆனால், ஜனவரி 12ஆம் தேதிக்குப் பிறகு ஆதார் இணைக்கப்படாத IRCTC கணக்குகளில் இருந்து நாள் முழுவதும் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு முழுமையாக நிறுத்தப்படும்.
