தங்கக் கடன் ஏற்கனவே பெற்றுள்ளவர்களுக்கும், இனி தங்கக் கடன் பெற திட்டமிடுவோருக்கும் முக்கியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. பிசினஸ் ஸ்டாண்டர்ட் வெளியிட்ட சமீபத்திய அறிக்கையின்படி, தங்கக் கடன் வாங்கும் போது முன்பைவிட அதிக கவனம் அவசியம் என நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
தங்கம் விலையில் ஏற்படும் திடீர் ஏற்ற இறக்கங்கள் கடனாளிகளை பாதிக்கக்கூடும் என்பதால், நகைகளின் மதிப்பில் குறைந்தபட்சம் 20 சதவீத பாதுகாப்பு இடைவெளியை அதாவது buffer வைத்திருப்பது அவசியம் என கூறப்படுகிறது. சந்தை நிலவரங்களை கருத்தில் கொள்ளாமல், கிடைக்கும் முழு கடன் வரம்பையும் பயன்படுத்துவது ஆபத்தானது என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பொதுவாக வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள், அடமானம் வைக்கப்படும் தங்கத்தின் மதிப்பில் 75 சதவீதம் வரை கடன் வழங்குகின்றன. இதை கடன்-மதிப்பு விகிதம் LTV என அழைக்கப்படுகிறது. இருப்பினும், முழு 75 சதவீதத்தைப் பெறுவதற்குப் பதிலாக, சற்றுக் குறைவாக கடன் வாங்குவது பாதுகாப்பானது என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். எதிர்காலத்தில் தங்க விலை குறைந்தால் கூட, கடன் மீது அழுத்தம் ஏற்படாமல் இருப்பதற்கு இது உதவும்.
சர்வதேச சந்தை காரணமாக தங்க விலை திடீரென சரிந்தால், வங்கிகள் ‘மார்ஜின் கால்’ விடுக்கும் வாய்ப்பு உள்ளது. அப்போது, கூடுதல் தொகையையோ அல்லது மேலதிக தங்கத்தையோ அடமானமாக வைக்கக் கோரலாம். ஆரம்பத்திலேயே குறைவாக கடன் வாங்கினால், இந்த நிலையைத் தவிர்க்க முடியும்.
ரிசர்வ் வங்கியின் புதிய வழிகாட்டுதல்களின்படி, தங்கக் கடன் வழங்கும் முறையில் வெளிப்படைத்தன்மை அதிகரிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 2026 முதல் அமலுக்கு வந்துள்ள இந்த விதிகளின்படி, தங்கத்தின் தூய்மை கணக்கீடு உள்ளிட்ட அம்சங்களில் கடுமையான தரநிலைகள் பின்பற்றப்படுகின்றன.
மேலும், ஒருவருக்கு அதிகபட்சமாக ஒரு கிலோ தங்கம் மட்டுமே அடமானம் வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடந்த 30 நாட்களின் சராசரி விலை அல்லது நேற்றைய இறுதி விலை — இதில் குறைவானதை அடிப்படையாகக் கொண்டு கடன் வழங்கப்படும்.
தேவைக்கு அதிகமாக கடன் வாங்குவது வட்டி சுமையை உயர்த்தும். தங்கக் கடனுக்கான வட்டி விகிதம் குறைவாக இருந்தாலும், கடன் தொகை அதிகரித்தால் மாதாந்திர தவணைகளும் அதிகரிக்கும். அதேபோல், தவணை செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டால், நகைகள் ஏலம் விடப்படும் அபாயமும் அதிகரிக்கும்.
எனவே, ரூ.1,00,000 மதிப்புள்ள தங்கம் இருந்தால், ரூ.75,000 வரை கடன் வாங்குவதற்குப் பதிலாக, ரூ.50,000 முதல் ரூ.60,000 வரை மட்டுமே கடன் பெறுவது பாதுகாப்பானது என நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். சந்தை மாற்றங்களை கருத்தில் கொண்டு, 20 சதவீத பாதுகாப்பு தாங்கலை பின்பற்றுவது தங்கக் கடனாளிகளுக்கு நன்மை தரும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
