தற்போது நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு எவ்வளவு தூரத்தில் உள்ளது, அது எப்போது மற்றும் எங்கு கரையை கடக்கும் என்பது குறித்து விரிவாக பார்ப்போம்.
வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, நேற்று தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது.
இன்று காலை நிலவரப்படி, இது தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், இலங்கையின் மட்டகளப்பிற்கு கிழக்கு–தென்கிழக்கே சுமார் 170 கிலோ மீட்டர் தொலைவிலும், திரிகோணமலைக்கு கிழக்கு–தென்கிழக்கே 250 கிலோ மீட்டர் தொலைவிலும், ஹம்பாந்தோட்டைக்கு கிழக்கு–வடகிழக்கே 270 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. இதேபோல், காரைக்காலுக்கு தென்கிழக்கே சுமார் 540 கிலோ மீட்டரும், சென்னைக்கு தெற்கு–தென்கிழக்கே சுமார் 710 கிலோ மீட்டர் தொலைவிலும் இந்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை (10.01.2026) மதியம் அல்லது மாலை நேரத்தில் இலங்கையின் வடக்கு கடலோர பகுதிகளில், திரிகோணமலை மற்றும் யாழ்ப்பாணம் இடையே கரையை கடக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், தெற்கு கேரள கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக, இன்று கடலோர தமிழகத்தின் பல இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், உள் தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மேலும், கடலோர தமிழகத்தின் சில பகுதிகளிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் அவ்வப்போது மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த தரை காற்று வீசக்கூடும். திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களின் சில இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதேபோல், இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், மயிலாடுதுறை மற்றும் கடலூர் மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
நாளை கடலோர தமிழகத்தின் பல இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், உள் தமிழகத்தின் சில இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை தொடரும். குறிப்பாக, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேலும், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களின் சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
வரும் 11ஆம் தேதியிலும், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களின் சில இடங்களிலும், புதுச்சேரியிலும் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
