சென்னை வானகரம் பகுதி, பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மாதா ஏஜென்சி என்ற பெயரில் ஆவின் மற்றும் தனியார் பால் விநியோகத்தில் ஈடுபட்டு வரும் பால் முகவர் குமார் என்பவரின் பாலகத்தில் இருந்து தொடர்ந்து இரண்டு நாட்களாக பால் திருட்டு நடைபெற்று வருகிறது.
நேற்று அதிகாலை சுமார் 3.30 மணியளவில், இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு இளைஞர்கள், அங்கு இறக்கி வைக்கப்பட்டிருந்த பால் டப்புகளில் இருந்து 12 லிட்டர் ஆவின் ஆரஞ்சு பால் பாக்கெட்டுகள் கொண்ட 3 பால் டப்புகளை, மொத்தம் 36 லிட்டர் பாலை திருடிச் சென்றுள்ளனர்.
இந்நிலையில் இன்று அதிகாலை சுமார் 2.30 மணியளவில், அதே அடையாளம் தெரியாத இரண்டு இளைஞர்கள் மீண்டும் இருசக்கர வாகனத்தில் வந்து, நான்கு பால் டப்புகளை திருடிச் சென்றுள்ளனர். இதில் மொத்தமாக 48 லிட்டர் பால் திருடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து இரண்டு நாட்களாக நடந்த இந்த பால் திருட்டு சம்பவம் தொடர்பாக வானகரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரின் பேரில் போலீசார் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி, திருட்டில் ஈடுபட்ட நபர்களை அடையாளம் காண விசாரணை நடத்தி வருகின்றனர்.
