Tuesday, January 13, 2026

சம்பளத்தில் பெரிய மாற்றம்., அரசு ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி ஒன்று விரைவில் வெளியாகும் சூழல் உருவாகியுள்ளது. 2026 ஜனவரி மாதம் முதல் DA, அதாவது அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியர்களுக்கான அகவிலைப்படி நிவாரணம் தலா 2 சதவீதம் உயர்ந்து, 60 சதவீதமாகும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. தற்போது 58 சதவீதமாக வழங்கப்பட்டு வரும் DA, இந்த உயர்வின் மூலம் புதிய உச்சத்தை எட்டவுள்ளது.

இந்த DA உயர்வு வெறும் எதிர்பார்ப்பு அல்ல; தொழிலாளர் பணியகம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின் அடிப்படையிலேயே கணக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். DA கணக்கீட்டிற்கு பயன்படுத்தப்படும் AICPI-IW அதாவது தொழில்துறை தொழிலாளர்களுக்கான அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீடு, 2025 நவம்பர் மாதத்தில் 0.5 புள்ளிகள் உயர்ந்து 148.2 ஆக பதிவாகியுள்ளது. இதுவே DA உயர்வுக்கான முக்கிய அடிப்படையாக அமைந்துள்ளது.

7வது ஊதியக்குழு விதிகளின்படி, கடந்த 12 மாதங்களின் CPI-IW சராசரியை அடிப்படையாகக் கொண்டு DA நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்த குறியீடு உணவு பொருட்கள், போக்குவரத்து, வீட்டு செலவுகள், சுகாதாரம் உள்ளிட்ட அன்றாட வாழ்க்கைச் செலவுகளை பிரதிபலிப்பதால், DA என்பது ஊழியர்களின் வாழ்க்கைச் செலவுகளுடன் நேரடியாக தொடர்புடையதாக கருதப்படுகிறது.

ஜூலை முதல் நவம்பர் 2025 வரை வெளியான தரவுகள் தொடர்ந்து உயர்வைக் காட்டி வருகின்றன. நவம்பர் மாத கணக்கீட்டின் அடிப்படையில் DA 59.93 சதவீதத்தை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இறுதியாக அறிவிக்கப்படும் DA 60 சதவீதமாக இருக்கும் என்பதில் பெரும் நம்பிக்கை உருவாகியுள்ளது. டிசம்பர் 2025 தரவு சிறிய மாற்றத்தை ஏற்படுத்தினாலும், மொத்த எண்ணிக்கை 60 சதவீதத்திற்குள் தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அரசின் நடைமுறையின்படி, DA முழு எண்களிலேயே அறிவிக்கப்படும். எனவே 60.00 முதல் 60.99 சதவீதம் வரை எவ்வளவு இருந்தாலும், அது 60 சதவீதமாகவே அறிவிக்கப்படும். இந்த உயர்வு 2026 ஜனவரி 1 முதல் அமலுக்கு வரும் நிலையில், அதிகாரப்பூர்வ அறிவிப்பு மார்ச் அல்லது ஏப்ரல் மாதங்களில் வெளியாகலாம்.

அதுவரை ஜனவரி முதல் அறிவிப்பு தேதி வரை உள்ள தொகை நிலுவையாக ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு வழங்கப்படும். 8வது ஊதியக்குழு செயல்படுத்தப்படுவதற்கு முன் வரவுள்ள இந்த DA உயர்வு, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.

Related News

Latest News