Tuesday, January 13, 2026

’’சசிகலா, ஓபிஎஸ் இணைப்புக்கு வாய்ப்பே இல்லை’’ – டெல்லியில் போட்டுத்தாக்கிய இபிஎஸ்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று இரவு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்களை சந்தித்து அரசியல் ஆலோசனை மேற்கொண்டார். இந்த சந்திப்பு குறித்து இன்று காலை டெல்லி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் இபிஎஸ் பேசினார்.

அப்போது அவர், ‘’அமித் ஷா அவர்களை அவரது இல்லத்தில் இரவு 9.30 மணியளவில் சந்தித்தேன். தமிழ்நாட்டின் அரசியல் நிலவரம் குறித்து அவர் கேட்டறிந்தார். தமிழகத்தைப் பொறுத்தவரைக்கும் திமுக அரசு அகற்றப்பட வேண்டும் என்ற அடிப்படையில் அதிமுக அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சியுடன் இன்னும் பல கட்சிகள் சேர இருக்கின்றன. மிக வலுவான கூட்டணி அமைக்கப்படும்.

எங்கள் கூட்டணி வெற்றிக்கூட்டணியாக அமையும். வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் திமுகவை வீழ்த்தி எங்கள் கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்.

ஸ்டாலின் அவர்கள் அண்மையில் உறுதியளிக்கப்பட்ட ஓய்வுத் திட்டம் என்ற அறிவிப்பை அறிவித்துள்ளார். இது அரசு ஊழியர்களை ஏமாற்றக்கூடிய ஒரு நாடகமாகத்தான் பார்க்கப்படுகிறது. அவர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தைத்தான் செயல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள்.

2021 சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின்போது திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டார்கள். அதை வலியுறுத்தித்தான் அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்கள் போராட்டத்தை கையில் எடுத்தவுடன் திமுக அரசு ஒரு நாடகத்தை அரங்கேற்றி இருக்கிறது.

உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் என்ற அறிவிப்பை வெளியிட்டு அரசு ஊழியர்களை ஏமாற்றி இருக்கிறார்கள். இன்றைக்கு மத்திய அரசு அறிவித்த ஒருங்கிணைந்த பென்ஷன் திட்டத்தின் அதே வடிவத்தில்தான், திமுக அரசு திட்டமும் இருக்கிறது. அதோடு இன்றைய தினம், ‘உங்கள் கனவை சொல்லுங்கள்’என்று ஒரு அறிவிப்பு வெளியிட்டு மக்களை ஏமாற்றுவதற்கு ஒரு நாடகத்தை அரங்கேற்றியிருக்கிறார்.

அரசு பணத்தில் 50 ஆயிரம் தன்னார்வலர்களை வீடு வீடாக அனுப்பி, மக்களின் கனவை சொல்லுங்கள் என்ற அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். இதற்கு பென் அமைப்பின் மூலம் ஆட்களைத் தேர்வு செய்து, இதை நடைமுறைப்படுத்துவதாக பரவலான பேச்சு இருக்கிறது. தேர்தல் அறிவிப்புக்கு இன்னும் 1 மாதம்தான் இருக்கிறது. இப்போது எப்படி போய் மக்கள் கனவை சொல்லச் சொல்லிக் கேட்டு, அதை நிறைவேற்ற முடியும்?

ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றது முதல் இன்றுவரை பேர் வைப்பதில் வல்லவர். ஒரு பேர் வைத்து ஒரு நாடகத்தை அரங்கேற்றுவார். போட்டோ ஷூட் நடத்தி பத்திரிகையில விளம்பரம் வரும். அப்படிப்பட்ட ஆட்சிதான் நடந்துகொண்டு இருக்கிறது.

நேற்றைய தினம் தொலைக்காட்சியில் பார்த்தேன், தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் ஒருவரையும் பின்தங்க விடமாட்டோம் என்று ஸ்டாலின் சொல்கிறார். தமிழ்நாட்டில் இந்த ஆட்சி அமைந்தவுடனே அது பின்னுக்கு தள்ளப்பட்டுவிட்டது. இந்த ஆட்சி முடியும்போது 5.5 லட்சம் கோடி கடன் விட்டுட்டு போகிறார்.

இதுவரையிலான 73 ஆண்டுகள் பல கட்சிகள் ஆட்சி புரிந்தபோது 2021 வரை 5 லட்சத்து 18 ஆயிரம் கோடி ரூபாய்தான் தமிழகத்தின் கடனாக இருந்தது. இப்போது திமுக ஆட்சி அமைந்த பிறகு 5 ஆண்டுகள் நிறைவு செய்யும்போது சுமார் 5.5 லட்சம் கோடி கடன் இருக்கிறது. இதனால் தமிழகத்துக்கும், மக்களுக்கும் பின்னடைவுதானே ஏற்படும்?

இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு போதை நடமாட்டம் அதிகமாகிவிட்டது. எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, திருட்டு, பாலியல் கொடுமை நடக்கிறது. போக்சோ வழக்கு அதிகமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறுமிகளுக்கும், பெண்களுக்கும் பாதுகாப்பில்லை. இந்த ஆட்சியில் தமிழ்நாடு பின்னோக்கி போய்க்கொண்டு இருக்கிறது…’’ என்றார்.

இதையடுத்து செய்தியாளர்கள் கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

கேள்வி: நேற்று உள்துறை அமைச்சரை சந்திக்கும்போது கூட்டணி நிலவரம் பற்றி பேசப்பட்டதா?

பதில்: கூட்டணி நிலவரம் பற்றி பேசவில்லை. அண்மையில் அவர் புதுக்கோட்டைக்கு வந்திருந்தார். அப்போது என்னால் அங்கே போக முடியவில்லை. ஏனென்றால் எனக்கு சேலத்தில் ஒரு கூட்டமும், கள்ளக்குறிச்சியில் ஒருகூட்டமும் ஒருந்தது. அதனால் அவரை சந்திக்க முடியவில்லை என்பதால் டெல்லியில் அவரை சந்தித்தேன். அவர் தமிழ்நாட்டில் நிலவும் அரசியல் சூழ்நிலையை கேட்டறிந்தார்.

கேள்வி: நேற்று பாமக தலைவர் அன்புமணியுடன் கூட்டணி பேச்சுவார்த்தை முடிவடைந்தது. எவ்வளவு தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பதை பின்னர் சொல்வதாக சொன்னீர்கள். மேலும் எந்தெந்த கட்சிகளுடன் பேசுவார்த்தை நடக்கிறது?

பதில்: வெளிப்படையாக எதையும் சொல்ல முடியாது. நான் ஏற்கெனவே சொன்னதுபோல் பாமக எங்களுடன் இணைந்துவிட்டார்கள். அதுபோல் இன்னும் பல கட்சிகள் எங்கள் கூட்டணியில் வந்து சேரும். அப்போது நாங்கள் தெளிவாக சொல்வோம். எல்லா கட்சிகளும் சேர்ந்த பிறகுதான் தொகுதி விவரத்தை அறிவிக்க முடியும்.

கேள்வி: அதிமுகவில் சசிகலா மீண்டும் இணைவது குறித்து?

பதில்: அப்படிப்பட்ட எண்ணம் இல்லை.

கேள்வி: அவர் வந்தால் சேர்த்துக்கொள்வீர்களா?

பதில்: இதுபற்றி ஊடகங்களிடம் பலமுறை தெரிவித்துவிட்டேன். மீண்டும் அதைக் கிளற வேண்டாம். அங்கே இடம் கிடையாது. நாங்கள் இல்லை என்று சொல்லிவிட்டோம். அதோடு விட்டுவிடுங்கள்.

கேள்வி: அவர்களை இணைத்தால் கட்சி வலுவாகுமே?

பதில்: அதிமுக வலிமையாக இருக்கிறது. உங்களைப்போல ஊடக நண்பர்கள்தான் அதை பில்டப் செய்து பெரிதாக போட்டுக்கொண்டு இருக்கிறீர்கள். அதிமுக வலிமையாக இருப்பதால்தான் 2021-ல் 75 இடங்களை எங்கள் கூட்டணி பெற்றது. வெறும் 2 லட்சம் வாக்குகளில் 43 தொகுதிகளை இழந்தோம். எங்களுக்கும் அவர்களுக்கும் பெரிய வித்தியாசம் எதுவுமில்லை. 3 சதவீதம் வித்தியாசம்தான்.

கேள்வி: டிடிவி தினகரனின் கட்சி உங்கள் கூட்டணியில் வருமா?

பதில்: ஹேஸ்யமாக சொல்வதற்கு எதுவும் இல்லை. சில கட்சிகள் எங்களோடு வரும். பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டு இருக்கிறார்கள். அதையெல்லாம் வெளிப்படையாகப் பேச முடியாது. ஒவ்வொரு கட்சியாக சேரும்போது உங்களையெல்லாம் அழைத்து நிச்சயமாக தகவல் தெரிவிக்கப்படும். பாமக எங்களோடு வந்து சேர்ந்தது. உடனே உங்களை அழைத்து பேட்டி கொடுக்கவில்லையா?

கேள்வி: ஓபிஎஸ் வந்தால்?

பதில்: ஓபிஎஸ் வருவதற்கு வாய்ப்பில்லை. பல முறை இதைப்பற்றி சொல்லிவிட்டோம். முதன்முதலாக ஐடிசி கிராண்ட் சோழாவில் எங்கள் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது உள்துறை அமைச்சரும் நானும் இணைந்து பேட்டி கொடுத்தோம். உள்கட்சி விவகாரத்தில் தலையிட மாட்டேன் என்று உள்துறை அமைச்சர் அப்போதே சொல்லிவிட்டார். தொடர்ந்து அப்படித்தான் இருக்கிறது.

கேள்வி: சசிகலா அவர்கள் கட்சியில் இணைந்தால்..?

பதில்: திருப்பித் திருப்பி அதையே கேட்கிறீர்கள். அதற்கு இடமில்லை என்று ஏற்கெனவே சொல்லிவிட்டோம். தெளிவுபடுத்திவிட்டோம். மீண்டும் மீண்டும் அரைத்த மாவையே அரைக்க வேண்டாம். இதோட 50 தடவை நான் சொல்லிட்டேன். டெல்லியிலேயும் நான் சொல்லிட்டேன். உங்களுக்கு விறுவிறுப்பான செய்தி வேண்டும் என்பதற்காக திருப்பித் திருப்பி அதையே கேட்காதீர்கள்.

கேள்வி: வேறு என்னென்ன கட்சிகள் வரும் என்று சொன்னால் எங்களுக்கு செய்தியாக இருக்கும்?

பதில்: அதையெல்லாம் வெளிப்படையாக சொல்ல முடியாது. நாங்கள் சேர்ந்த உடனே உங்களுக்கு தகவல் கொடுக்கப்போகிறோம். பேச்சுவார்த்தை நடந்துகொண்டு இருக்கிறது.

கேள்வி: பிரதமர், உள்துறை அமைச்சர் தமிழகத்துக்கு வருவது பற்றி நேற்று ஏதவது விவாதிக்கப்பட்டதா? எப்போது வருகிறார்கள்?

பதில்: அதையெல்லாம் நாங்கள் அறிவிப்போம். இப்போதுதான் முதல்முறையாக அரசியல் சூழ்நிலை பற்றி பேசி இருக்கிறோம். பாரதப் பிரதமரோ மற்ற மத்திய அமைச்சர்களோ வருகின்றபோது நிச்சயமாக ஊடகத்துக்கு தெரிவிக்கப்படும். பாஜக தலைவர்களும் தெரிவிப்பார்கள். நாங்களும் தெரிவிப்போம்.

கேள்வி: நேற்று முதல்வர் பேசும்போது தமிழகத்தை தமிழகத்தில் உள்ளவர்கள்தான் ஆட்சி செய்ய வேண்டும் டெல்லியில் இருந்து பிராக்ஸி அரசு ஆளக்கூடாது என்ரு ஒரு கருத்தை சொல்லியிருக்கிறார்.

பதில்: அப்படித்தான் நாங்களும் சொல்லிக்கொண்டு இருக்கிறோம். அவர் தெரிந்து பேசுகிறாரா, தெரியாமல் பேசுகிறாரா என்பது தெரியவில்லை. எங்கள் கூட்டணிக்கு யார் தலைமை? அதிமுகதான் தலைமை. அதிமுகதான் ஆட்சி அமைக்கும்னு சொல்லிவிட்டோம்.

அவர்கூடத்தான் காங்கிரஸ் கட்சியோட சேர்ந்திருக்கார். இந்தி எதிர்ப்பு போராட்டம், எமர்ஜென்சி, மிசா சட்டம் என்று தங்களை காங்கிரஸ் ஆட்சியில் கைது செய்ததாக முதல்வர் ஸ்டாலின் ஒவ்வொரு முறையும் சொல்லி வருகிறார். கலைஞர் நூற்றாண்டு கண்காட்சியில் ஸ்டாலின் மிசா சட்டத்தில் சிறையில் இருந்ததைப் போல் காட்டினார்கள். அப்படிப்பட்ட கட்சியோடுதானே அவர்கள் கூட்டணி அமைத்திருக்கிறார்கள்.

கூட்டணி என்பதை அவ்வப்போது எல்லா கட்சிகளும் அமைத்து வருகின்றன. 1999-ல் திமுக பாஜகவுடன் கூட்டணி வைத்ததா, இல்லையா? அப்போதெல்லாம் அவர்கள் நேரடியாக ஆண்டார்களா? அவர்கள் பாஜகவின் மத்தியமைச்சரவையில் இடம் பெற்றிருந்தார்களா இல்லையா? 2001 சட்டமன்றத் தேர்தலிலும் கூட்டணி அமைத்திருந்தார்கள். அதையெல்லாம் நீங்கள் கேட்கமாட்டேன் என்கிறீர்கள். எல்லா கட்சிகளும் எங்களோடும் கூட்டணி வைத்திருக்கிறார்கள். திமுகவுடனும் கூட்டணி வைத்திருக்கிறார்கள். கூட்டணி என்பது அந்தந்த சூழ்நிலைக்குத் தகுந்தது.

கேள்வி: கூட்டணி என்பது வேறு. ஆனால் எல்லாமே அமித் ஷா சொன்னதை கேட்டு நடப்பதாக சொல்கிறாரே?

பதில்: அப்படியென்று நீங்கள்தான் சொல்கிறீர்கள்.

கேள்வி: அமித் ஷா பெரியவரா? பழனிசாமி பெரியவரா?

பதில்: அப்படியெல்லாம் இல்லை. மக்கள்தான் பெரியவர்கள். எங்க கட்சிக்கு நாங்கள், அவர்கள் கட்சிக்கு அவர்கள் பெரியவர்கள். ஸ்டாலின் இதைத்தவிர வேற என்ன குற்றம் சொல்ல முடியும்? அதிமுக ஆட்சி சிறப்பான ஆட்சி. எங்கள் ஆட்சி பற்றி குறை சொன்னால் நாங்கள் பதில் சொல்லுவோம்.

எப்போது பார்த்தாலும் பாஜக மதவாதக் கட்சி என்று சொல்கிறார். அப்படி மதவாத கட்சின்னா நீங்க எப்படி போய் சேர்ந்தீங்க? அப்போது அது மதவாதக் கட்சி இல்லையா? அதே கட்சிதானே இப்போதும் தொடர்ந்து இருக்கிறது? பிரதமர், தலைவர்கள் மாறினாலும் கட்சி அதே பாஜகதான். எங்களைப்பற்றி குறை சொல்ல ஏதுமில்லாததால் இப்படிப்பட்ட குறையை கண்டுபிடித்து ஒரு தவறான செய்தியை முதல்வர் பரப்பி வருகிறார்.

எங்கள் ஆட்சியின் மீது ஒரு புகாரை சொல்லச் சொங்லுங்கள். இப்போது எவ்வளவு ஊழல் நடந்திருக்கிறது? அவ்வளவு ஊழல்கள் பற்றியும் ஆளுநரிடம் நாங்கள் கொடுத்துள்ளோம். 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல். எனவே, திமுக தோல்வியடைவது உறுதி.

Related News

Latest News