பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகத்தை சென்னை ஆலந்தூர், நசரத்புரத்தில் உள்ள ரேஷன் கடையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (வியாழக்கிழமை) தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் அமைச்சர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.
இன்றைய தினமே அனைத்து ரேஷன் கடைகளிலும் பொதுமக்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தின் அடிப்படையில் பரிசுத் தொகுப்பைப் பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாட தமிழக அரசு சார்பில் 2 கோடியே 22 லட்சத்து 91 ஆயிரத்து 730 அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கும், இலங்கை தமிழர் குடும்பங்களுக்கும், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு பொருட்களுடன் தலா ரூ.3 ஆயிரம் ரொக்கத்தொகையும் வழங்கப்படுகிறது.
