இந்தியாவில் குற்றச்செயல்கள் அதிகம் நடைபெறும் மாநிலங்களில் உத்தரப் பிரதேசம் முன்னணி இடத்தில் இருந்தது. ஆனால், யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு அமைந்த பிறகு, மாநிலத்தில் குற்றச்செயல்கள் கணிசமாக குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்குக் காரணமாக, குற்றவாளிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட காவல் துறை என்கவுன்ட்டர் நடவடிக்கைகள் குறிப்பிடப்படுகின்றன.
இந்த நிலையில், உத்தரப் பிரதேச காவல் துறை இயக்குநர் ராஜீவ் கிருஷ்ணா செய்தியாளர்களிடம் பேசியபோது, 2025ஆம் ஆண்டில் மட்டும் மாநில காவல் துறை 2,739 என்கவுன்ட்டர்களை நடத்தியதாக தெரிவித்தார். இவை அனைத்தும் சட்டப்படி மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் எனவும் அவர் கூறினார்.
இந்த என்கவுன்ட்டர்களில் 3,153 குற்றவாளிகள் காயமடைந்தனர். ஒரு காவலர் பணியின்போது உயிரிழந்தார். மேலும், மாநிலத்தின் முக்கியமான 48 குற்றவாளிகள் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த 8 ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், இது அதிகமான எண்ணிக்கையாகும்.
2017 மார்ச் 20 முதல் 2025 டிசம்பர் 29 வரை, உத்தரப் பிரதேசத்தில் மொத்தம் 266 குற்றவாளிகள் என்கவுன்ட்டர்களில் உயிரிழந்துள்ளனர். ஆண்டுவாரியாகப் பார்த்தால், 2018ஆம் ஆண்டில் 41 பேர், 2019ஆம் ஆண்டில் 34 பேர், 2020 மற்றும் 2021ஆம் ஆண்டுகளில் தலா 26 பேர் என்கவுன்ட்டர்களில் கொல்லப்பட்டுள்ளனர்.
2025ஆம் ஆண்டில் சட்டவிரோத மதமாற்றம் தொடர்பாக 475 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 855 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் 379 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதேபோல், பசு கடத்தல் மற்றும் பசு வதை தொடர்பாக 1,197 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 3,128 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் 958 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் 1,886 பேருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு, ரூ.7.38 கோடி மதிப்புள்ள சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் காவல் துறை தெரிவித்துள்ளது.
