நாடு முழுவதும் முக்கிய வழித்தடங்களில் வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்திலும் இந்த ரெயில்கள் வெற்றிகரமாக இயக்கப்பட்டு, பயணிகளிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.
வந்தே பாரத் ரெயில்களில் இருக்கை வசதி மட்டுமே உள்ளதால், நீண்ட தூர பயணங்களுக்கு படுக்கை வசதி வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த கோரிக்கையை தொடர்ந்து, படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ஸ்லீப்பர் ரெயில்களை தயாரிக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வந்தன.
இந்நிலையில், மத்திய ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். வந்தே பாரத் ஸ்லீப்பர் ரெயில் கொல்கத்தா – கவுகாத்தி இடையே இயக்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். வரும் 18 அல்லது 19 ஆம் தேதிகளில் பிரதமர் நரேந்திர மோடி இந்த ரயில் சேவையை தொடங்கி வைக்க உள்ளதாகவும், இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியாகும் என்றும் அவர் கூறினார்.
கட்டண விவரங்களைப் பொருத்தவரை, மூன்றாம் வகுப்பு ஏசி பெட்டிக்கான கட்டணம் ரூ.2,300 ஆகவும், முதல் வகுப்பு பெட்டிக்கான கட்டணம் ரூ.3,600 ஆகவும் இருக்கும் என ரெயில்வே அமைச்சர் தெரிவித்தார்.
