Monday, December 29, 2025

டிசம்பர் 31 முதல் ஜனவரி 2 வரை – வானிலை மையம் எச்சரிக்கை

மக்கள் ஆவலுடன் புத்தாண்டை எதிர்பார்த்து காத்திருக்கும் நேரத்தில், மழை குறித்த அப்டேட்டினை சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”கேரள கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல், ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தெற்கு கடலோர ஆந்திர பிரதேசம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதன் காரணமாக, டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் டிசம்பர் 29 லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஏனைய தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும். இரவு அல்லது அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில், டிசம்பர் 30ம் தேதி லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். இரவு/அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் வரும் 31ம் தேதி முதல் ஜனவரி 2ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இரவு அல்லது அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் வரும் 31ம் தேதி வரை குறைந்தபட்ச வெப்பநிலையில் பொதுவாக பெரிய மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு. ஓரிரு இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட குறைவாக இருக்கக்கூடும். தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் மற்றும் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் இரவு அல்லது அதிகாலை வேளையில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். இரவு அல்லது அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 28 முதல் 29° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21-22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

தென்தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். ஆகையால், மீனவர்கள் இன்று இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்”, இவ்வாறு தெரிவித்துள்ளது.

Related News

Latest News