சேலத்தில் டாக்டர் ராமதாஸ் தலைமையில் இன்று பாமக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் ராமதாஸ் பாமக தலைவராக தேர்வு செய்யப்பட்டும், கூட்டணி குறித்து முடிவெடுக்க அவருக்கே முழு அதிகாரம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் கௌரவத் தலைவராக ஜி.கே.மணி, செயல் தலைவராக ஸ்ரீகாந்தி, பொதுச் செயலாளராக முரளி சங்கர் ஆகியோரை அங்கீகரித்து பாமக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த பொதுக்குழுவில் பேசிய ஸ்ரீகாந்தி, அன்புமணி தரப்பை ஆர்எஸ்எஸ் கைக்கூலி என கடுமையாக விமர்சித்தார்.
தொடர்ந்து கூட்டத்தில் பேசிய ஸ்ரீகாந்தி, “பாமகவை வளர்த்தெடுத்த ராமதாஸிடம் இருந்து கட்சியை அபகரித்துவிட்டு யாருக்காக நீங்கள் (அன்புமணி) போராடப் போகிறீர்கள்? ராமதாஸை கேள்வி கேட்க உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது? மருத்துவர் பட்டமும் எம்பி, அமைச்சர் பதவிகளும் அன்புமணிக்கு ராமதாஸ் போட்ட பிச்சை.
அன்புமணி செய்தது பச்சைத் துரோகம். தலைவரை கண்டுகொள்ளாமல் பாமகவுக்கு இனி நான்தான் தலைவர் என்று கூறினால் நாம் ஏற்றுக்கொள்ள முடியுமா? அன்புமணிக்கு அதிகாரம் வேண்டுமெனால் தனியாகக் கட்சி தொடங்கட்டும். இது ராமதாஸ் வளர்த்தெடுத்த கட்சி. அவர்தான், பாமக எனும் கோட்டைக்கு ராஜா. இதற்கு யாரும் உரிமை கொண்டாட முடியாது.
திமுக கைக்கூலி என்று எங்களை விமர்சித்தவர்கள் எல்லாம் ஆர்எஸ்எஸ் அடிமைகள். 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் எம்எல்ஏக்களின் பலத்துடன் நாம் சட்டப்பேரவைக்குள் நுழைவோம்.
பேரவைத் தேர்தலில் பாமக யாருடன் கூட்டணி, எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்து ராமதாஸ் ஏற்கெனவே முடிவெடுத்துவிட்டார். ராமதாஸின் ஆட்டத்தை இனிமேல்தான் பார்க்கப் போகிறீர்கள். இனிமேல் குறுக்கே பேச யாரும் இல்லை, காலை வாரிவிடவும் யாரும் இல்லை” என்று பேசினார்.
