பொங்கல் பரிசு தொகுப்புடன் ரொக்கம் வழங்கப்படுமா, எவ்வளவு தொகை வழங்கப்படும், எப்போது வழங்கப்படும் என்பதே தற்போது பொதுமக்களின் மிகுந்த எதிர்பார்ப்பாக உள்ளது. கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ரொக்கம் வழங்கப்படாதது பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியது.
அதிமுக ஆட்சிக் காலத்தில், 2021 ஆம் ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.2,500 ரொக்கம் வழங்கப்பட்டது. அதன் பின்னர் திமுக ஆட்சியில் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1,000 ரொக்கம் வழங்கப்பட்டது.

இந்த நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திருப்போரூரில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் அவர் பேசுகையில், “சவாலான கொரோனா தொற்று காலத்தில் அதனை திறமையாக கையாண்டு மக்களை பாதுகாத்தது அதிமுக அரசு. அந்த நேரத்தில் அனைவரும் பொங்கலை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பதற்காக ரேஷன் கார்டு வைத்துள்ளவர்களுக்கு ரூ.2,500 வழங்கப்பட்டது.
அப்போது ஸ்டாலின் ரூ.5,000 வழங்க வேண்டும் என்று கோரினார். ஆனால் கடந்த பொங்கலுக்கு தற்போதைய அரசு ஒரு ரூபாய் கூட வழங்கவில்லை. எனவே வரவுள்ள பொங்கலுக்கு ரேஷன் கார்டு வைத்துள்ளவர்களுக்கு அரசு ரூ.5,000 வழங்க வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.
