பெண்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ள கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தமிழ்நாடு அரசுக்கு பெரும் பாராட்டை பெற்றுத் தந்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் சுமார் 1.30 கோடி பெண்களுக்கு மாதம் தோறும் 1000 ரூபாய் நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இன்னும் பல பெண்கள் இந்த திட்டத்தில் தங்களை சேர்க்க வேண்டும் என்று எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அண்மையில் இரண்டாம் கட்ட விரிவாக்கம் செய்யப்பட்டு சில பெண்கள் புதிதாக சேர்க்கப்பட்டிருந்தாலும், இதுவரை தொகை பெறாத பெண்கள் அரசின் அடுத்த அறிவிப்பை எதிர்நோக்கி உள்ளனர்.
இதற்கிடையில், மாதம் வழங்கப்படும் 1000 ரூபாய் மகளிர் உரிமைத் தொகை விரைவில் உயர்த்தப்படலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இதனை கூறியிருப்பது தமிழ்நாடு முதலமைச்சரே என்பதால், இந்த தகவல் அதிக கவனம் பெற்றுள்ளது.
அடுத்த ஆண்டு தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருப்பதால், பெண்களுக்கு வழங்கப்படும் மகளிர் உரிமைத் தொகையை உயர்த்த முதலமைச்சர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பான அறிவிப்பு திமுகவின் தேர்தல் அறிக்கையில் இடம்பெறும் வாய்ப்பும் உள்ளது.
அதிகபட்சமாக 500 ரூபாய் உயர்த்தி, மாதம் 1500 ரூபாய் வழங்க வாய்ப்பு அதிகம் என கூறப்படுகிறது. இது அரசுக்கு மிகப்பெரிய பொருளாதார சுமையில்லாமல், நடைமுறையில் சாத்தியமான திட்டமாக இருக்கும் என்பதாலேயே இந்த அளவு உயர்வு எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வகையில், சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாக மகளிர் உரிமைத் தொகையை 1500 ரூபாயாக உயர்த்தும் அறிவிப்பு வெளியாகும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. ஆனால், உயர்த்தப்பட்ட தொகை பெண்களுக்கு வழங்கப்படுவது தேர்தலுக்குப் பிறகு, திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தான் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்படுகிறது.
