2025ம் ஆண்டில், இந்தியர்களை அதிகமாக நாடு கடத்தியது அமெரிக்கா தான் என்று பெரும்பாலோனோர் நினைக்கின்றனர். ஆனால் தரவுகள் அப்படி சொல்லவில்லை. இதுகுறித்து வெளியுறவு துறை விவகாரங்கள் அமைச்சகம், மாநிலங்களவையில் தரவுகள் வெளியிட்டுள்ளது.
அதன்படி 2025ம் ஆண்டு 81 நாடுகளில் இருந்து 24,600 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டு இருக்கின்றனர். இதில் முதலிடத்தில் சௌதி அரேபியா இருக்கிறது. கடந்த 12 மாதங்களில், சௌதி அரேபியாவிலிருந்துதான் 11,000 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
இந்த எண்ணிக்கையுடன் ஒப்பிட்டால், அமெரிக்காவிலிருந்து 3,800 பேர் அதுவும் சட்டவிரோதமாக நுழைந்தவர்களும், தனியார் நிறுவனங்களில் பணியாற்றி வந்தவர்களும் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
மியான்மர் அடுத்த இடத்தில் இருக்கிறது. இங்கிருந்து 1,591 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளனர். ஆனால், இங்கிருந்து நாடு கடத்தப்பட்டவர்கள், வேலை தேடிச் சென்று சைபர் குற்றவாளிகளிடம் அடிமைகளாக சிக்கியிருந்தவர்கள் என்று கூறப்படுகிறது.
ஐக்கிய அரபு நாடுகளிலிருந்து நாடு கடத்தப்படக் காரணங்களாக, வேலை விசா இல்லாமல் இருப்பது, விசா காலம் முடிந்துவிட்டது போன்றவை முன்னணியில் உள்ளன. இங்கிருந்து 1,469 பேர் நாடு கடத்தப்பட்டிருக்கிறார்கள். இந்த பட்டியலில் மலேசியா, தாய்லாந்து, கம்போடியா நாடுகளும் உள்ளன.
இந்த நாடுகளிலிருந்து வந்தவர்களும், பெரும்பாலும் வேலைதேடிச் சென்று சைபர் குற்றவாளிகளிடம் அடிமைகளாக சிக்கியவர்களே பெரும்பாலானோர் என்று கூறப்படுகிறது.
