Friday, December 26, 2025

வேலையை விட்டு வெளியேறினால் PF பணம் என்ன ஆகும்னு தெரியுமா?

நீங்கள் பணிபுரியும் நிறுவனத்தில் திடீரென வேலை மாற்றம் ஏற்பட்டாலோ அல்லது வேலைவிடுவிக்கப்பட்டாலோ, உங்கள் பிஎஃப் (PF) பணம் என்ன ஆகும் எனபது குறித்து பலருக்கு குழப்பம் ஏற்படுகிறது.

வேலை விட்டவுடன் பிஎஃப் கணக்கு செயலிழந்துவிடுமோ, வட்டி கிடைக்காதோ என்று நினைத்து தேவையில்லாமல் முன்கூட்டியே பணத்தை எடுத்துவிடுகிறார்கள். ஆனால், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) விதிகளின்படி, நீங்கள் வேலை மாறினாலும் அல்லது வேலை இல்லாமல் இருந்தாலும் உங்கள் பிஎஃப் பணம் முழுமையாக பாதுகாப்பாக இருக்கும்.

நீங்கள் வேலையை விட்ட பிறகும் உங்கள் பிஎஃப் கணக்கில் வட்டி சேர்வது நிற்காது. உங்கள் பிஎஃப் கணக்கு யுனிவர்சல் கணக்கு எண்ணுடன் (UAN) இணைக்கப்பட்டிருந்தால், புதிய மாத பங்களிப்புகள் வராவிட்டாலும் வட்டி தொடர்ந்து சேரும்.

EPFO ஒவ்வொரு ஆண்டும் உங்கள் பிஎஃப் இருப்புத் தொகையில் வட்டியை சேர்த்து கொண்டே இருக்கும். நீங்கள் முழுத் தொகையையும் எடுக்கும் வரை அல்லது 58 வயதை அடையும் வரை இந்த வட்டி தொடரும்.

பிஎஃப் பணத்தை எடுப்பது எப்படி?

உங்கள் விவரங்கள் சரியாக இருந்தால், பிஎஃப் தொகையை ஆன்லைனில் எடுப்பது எளிதான செயல்முறையாகும். முதலில் EPFO இணையதளத்தில் உங்கள் UAN எண்ணைப் பயன்படுத்தி உள்நுழைய வேண்டும்.

ஆதார், பான் மற்றும் வங்கி கணக்கு போன்ற KYC விவரங்கள் புதுப்பிக்கப்பட்டு சரிபார்க்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

பின்னர் ‘Online Services’ பகுதியில் ‘Claim (Form-31, 19, 10C)’ என்பதைத் தேர்வு செய்ய வேண்டும்.
உங்கள் வங்கி கணக்கு விவரங்களை சரிபார்த்து, பணம் எடுப்பதற்கான காரணத்தை (ஓய்வு, மருத்துவ செலவு, வீடு வாங்குதல் போன்றவை) தேர்வு செய்ய வேண்டும்.

OTP மூலம் கோரிக்கையை உறுதிப்படுத்தினால், பொதுவாக 7 நாட்களுக்குள் தொகை உங்கள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். பணம் எடுக்கும் போது தாமதம் ஏற்படாமல் இருக்க, உங்கள் கணக்கு விவரங்களை சரியாக புதுப்பித்து வைத்திருப்பது அவசியம்.

Related News

Latest News