Thursday, December 25, 2025

டிசம்பர் 29 முதல் ரயில் டிக்கெட் முன்பதிவில் மேஜர் மாற்றம்..!!

பொதுமக்கள் ரயில்களில் எளிதாகவும் வசதியாகவும் பயணம் செய்ய வேண்டும் என்பதற்காக, இந்திய ரயில்வே தொடர்ந்து பல புதிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக, ரயில் டிக்கெட் முன்பதிவு முறையை எளிமையாக்கவும், உண்மையான பயணிகளுக்கு முன்னுரிமை கிடைக்கவும் இந்த மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

அதன் ஒரு பகுதியாக, ஐஆர்சிடிசி செயலி அல்லது இணையதளம் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யும் பயனர்கள், தங்களது ஐஆர்சிடிசி கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்து அங்கீகார சரிபார்ப்பை முடித்திருக்க வேண்டும் என்று ரயில்வே அறிவித்துள்ளது. இவ்வாறு ஆதார் அங்கீகாரம் முடித்தவர்களுக்கு தட்கல் மற்றும் பொது டிக்கெட் முன்பதிவில் முன்னுரிமை வழங்கப்படுகிறது.

தற்போது, ரயில் பயணத்திற்கு 60 நாட்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும். இதை Advance Reservation Period என்று அழைக்கப்படுகிறது. இந்த முன்பதிவு தொடங்கும் முதல் நாளில், ஆதார் அங்கீகாரம் பெற்ற ஐஆர்சிடிசி பயனர்களுக்கான டிக்கெட் முன்பதிவு நேரம் தற்போது மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

முதலில், Advance Reservation Period தொடங்கும் நாளில் முதல் 15 நிமிடங்கள் ஆதார் அங்கீகாரம் பெற்ற பயனர்கள் மட்டுமே டிக்கெட் முன்பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டனர். பின்னர் இந்த நேரம் காலை 8 மணி முதல் 10 மணி வரை நீட்டிக்கப்பட்டது. தற்போது, இந்த கால அவகாசம் மேலும் விரிவுபடுத்தப்படுகிறது.

இந்த புதிய நேர மாற்றம் டிசம்பர் 29 முதல் ஜனவரி 12 வரை படிப்படியாக அமல்படுத்தப்படும் என்று ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.

இதன்படி,

டிசம்பர் 29 முதல்: காலை 8:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை
ஜனவரி 5 முதல்: காலை 8:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை
ஜனவரி 12 முதல்: காலை 8:00 மணி முதல் இரவு 12:00 மணி வரை

ஆதார் அங்கீகாரம் பெற்ற ஐஆர்சிடிசி பயனர்கள், டிக்கெட் முன்பதிவு தொடங்கும் முதல் நாளில் டிக்கெட் பதிவு செய்ய முடியும். இந்த மாற்றங்கள் மூலம், டிக்கெட் முன்பதிவு முறை மேலும் வெளிப்படையாகவும், பயணிகளுக்கு உகந்ததாகவும் மாறும் என்று இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.

Related News

Latest News