கடந்த சில ஆண்டுகளாக உலகம் முழுவதையும் பெரிய அளவில் மாற்றிக் கொண்டிருக்கும் ஒரே வார்த்தை என்றால் அது AI தான். AI மிக வேகமாக வளர்ந்ததால், உலகளவில் அதற்கான முதலீடுகள் பெரிதாக குவிந்தன. பல நிறுவனங்கள், “AI வந்தால் மனிதர்கள் தேவையில்லை, ஊழியர்களுக்குப் பதிலாக AIயை பயன்படுத்தினால் சம்பளச் செலவு குறையும்” என்று நம்பின. ஆனால், கடந்த ஒரு ஆண்டுக்குள் இந்த எண்ணம் தலைகீழாக மாறியுள்ளது.
அதற்கு சேல்ஸ்ஃபோர்ஸ் ஒரு முக்கிய உதாரணம். AI-ஐ ஆரம்பத்திலேயே பெரிய அளவில் பயன்படுத்தத் தொடங்கிய சர்வதேச நிறுவனங்களில் ஒன்று Salesforce. அதன் CEO மார்க் பெனியோஃப், “AI விரைவில் மனிதர்களின் இடத்தை பிடிக்கும்” என்று வெளிப்படையாகவே கூறினார்.
இதன் விளைவாக, அந்நிறுவனத்தில் பெரிய அளவில் ஆட்குறைப்பு நடந்தது. முன்பு சுமார் 9,000 ஊழியர்கள் வேலை செய்த இடத்தில், அது 5,000 ஆக குறைக்கப்பட்டது. ஆனால் நிலைமை விரைவில் மாறியது. ஒரு ஆண்டுக்குள், AI தொடர்பான பல சிக்கல்கள் வெளிச்சத்துக்கு வந்தன.
AI டூல்களுக்கு ஒரே நேரத்தில் 8 வழிமுறைகள் (Instructions) மட்டுமே கொடுக்க முடிகிறது. அதற்கு மேல் கொடுத்தால் அதன் செயல்திறன் கடுமையாக குறைகிறது.
AI Drift என்ற பிரச்சினை உள்ளது. அதாவது, தொடர்பில்லாத விஷயங்களை பயனர் பேசினாலும், AI அதையே தொடர ஆரம்பித்து, தனது முக்கிய வேலையை மறந்துவிடுகிறது. AIயை முழுமையாக நம்ப முடியாத சூழலும் உருவானது.
ஒரு நிறுவனத்தில், வாடிக்கையாளர்களிடம் கருத்து கேட்கும் மெயில் சர்வே அனுப்பும் பணியை AIக்கு ஒப்படைத்தனர். சில நாட்களுக்குப் பிறகு, எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் AI அந்த சர்வே பணிகளை நிறுத்திவிட்டது. ஏன் நிறுத்தியது என்பதையும் யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இவ்வாறு தொடர்ந்து பல பிரச்சினைகள் தெரிய வந்ததால், AI மீது முழு நம்பிக்கை வைத்திருந்த Salesforce நிறுவனத்தின் தலைமையே தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டது. AI பயன்பாட்டை குறைத்து, பழைய மனிதர் சார்ந்த டூல்கள் மற்றும் முறைகளுக்கு அவர்கள் மீண்டும் திரும்பினர்.
இதன் மூலம், சிக்கலான கார்ப்பரேட் வேலைகளுக்கு AI முழுமையாக பொருந்தாது என்பதையே Salesforce அனுபவம் காட்டுகிறது.
