அரசு பேருந்துகளை தனியார் ஆம்னி பேருந்துகளுக்கு இணையான தரத்திற்கு உயர்த்தும் நோக்கில், அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் 2025–2026 நிதியாண்டில் புதிய தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய 130 புதிய பேருந்துகளை கொள்முதல் செய்துள்ளது.
இதில் 110 பேருந்துகள் குளிர்சாதன வசதி இல்லாத இருக்கை மற்றும் படுக்கை வசதியுடன் உள்ளவையாகும். மீதமுள்ள 20 பேருந்துகள் குளிர்சாதன வசதி கொண்ட வால்வோ மல்டி ஆக்சில் சொகுசு பேருந்துகளாகும்.
இந்த 20 அதிநவீன சொகுசு பேருந்துகள் பெங்களூரில் கட்டமைக்கப்பட்டு, பணிகள் நிறைவடைந்த பின்னர் அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தின் சென்னை பணிமனைக்கு கொண்டு வரப்பட்டன. இந்த 20 மல்டி ஆக்சில் வால்வோ குளிர்சாதன சொகுசு பேருந்துகளின் சேவையை சென்னை தீவுத்திடலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த வால்வோ ஏ.சி. பேருந்துகள் சென்னை, பெங்களூரு, கோவை, திருச்சி, மதுரை, சேலம், திருநெல்வேலி, தஞ்சாவூர், நாகர்கோவில், திருச்செந்தூர், திருப்பூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு இயக்கப்பட உள்ளன.
