தமிழக–கேரள எல்லையில் உள்ள வேலந்தாவளம் சோதனைச் சாவடியில், போலீசார் இன்று காலை வாகனச் சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது கோவையிலிருந்து கேரளாவை நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவரை போலீசார் கவனித்தனர். அவர் போலீசாரைப் பார்த்ததும் திடீரென வாகனத்தை திருப்பி வேகமாகச் செல்ல முயன்றதால், சந்தேகமடைந்த போலீசார் அவரை விரட்டிப் பிடித்து வாகனத்தை சோதனை செய்தனர்.
சோதனையில், அந்த இருசக்கர வாகனத்தின் இருக்கையின் அடிப்பகுதியிலும், பெட்ரோல் டேங்கின் உள்ளேயும் மிக நுட்பமாக அமைக்கப்பட்ட ரகசிய அறைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதில், ரூ.56 லட்சத்து 50 ஆயிரம் ரொக்கம் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் பெருந்தல்மன்னாவைச் சேர்ந்த ஷபீக் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். பறிமுதல் செய்யப்பட்ட பணத்துக்கு உரிய எந்தவிதமான ஆவணங்களும் அவரிடம் இல்லாததால், அது ஹவாலா பணம் என போலீசார் உறுதி செய்தனர்.
பின்னர் அந்த பணத்தை உடனடியாக வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வருமான வரித்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
