தமிழக சட்டசபை நெருங்கும் நிலையில், அதிமுக – பாஜக கூட்டணி தேர்தல் பணிகளை விரிவுபடுத்தி உள்ளன. இந்நிலையில் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் அர்ஜூன்ராம் மேவல் இருவரும் இன்று சென்னை வந்தனர்.
தொடர்ந்து அவர்கள் அதிமுக பொதுச்செயலர் இபிஎஸ், முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன், கே.பி.முனுசாமி ஆகியோரை சந்தித்தனர்.
இந்த நிலையில், மத்திய மந்திரியும் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது; “எனது நண்பரும், சகோதரருமான எடப்பாடி பழனிசாமியை சந்தித்ததில் மகிழ்ச்சி. இந்த சந்திப்பு சிறப்பாக நடந்தது. 2026 தேர்தலை எதிர்கொள்வது குறித்து ஆலோசனை செய்தோம்.
2026 தேர்தலை பிரதமர் மோடியின் வழிகாட்டுதலுடன் தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ள உள்ளோம். எடப்பாடி பழனிசாமி தலைமையில் தேர்தலை எதிர்கொள்வோம். வளர்ச்சி, வேலைவாய்ப்பே பாஜகவின் இலக்கு. வருகிற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றிபெறும். ஊழல் திமுக கூட்டணியை தோற்கடிப்போம்.” இவ்வாறு அவர் பேசினார்.
