கர்நாடக மாநிலத்தில் தலித் இளைஞரை காதல் திருமணம் செய்த இளம்பெண், கர்ப்பமாக இருந்த நிலையில் அவரது தந்தையால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹுப்பள்ளி மாவட்டத்தைச் சேர்ந்த இனாம்-வீரப்பூர் கிராமத்தில் வசித்து வந்த மான்யா (வயது 20), அதே பகுதியைச் சேர்ந்த தலித் சமூகத்தைச் சேர்ந்த விவேகானந்தா என்பவரை கடந்த மே மாதம் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்திற்கு மான்யாவின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
கடந்த டிசம்பர் 8ஆம் தேதி மான்யா மற்றும் விவேகானந்தா தங்கள் சொந்த கிராமத்திற்கு திரும்பியுள்ளனர். அப்போது, மான்யாவின் தந்தை பிரகாஷ் கெளடா, அடிக்கடி விவேகானந்தாவின் வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்றிரவு பிரகாஷ் கெளடா தனது இரண்டு மகன்களுடன் விவேகானந்தாவின் வீட்டிற்கு சென்று, இரும்புக் கம்பிகள் மற்றும் ஆயுதங்களை பயன்படுத்தி மான்யா, விவேகானந்தா மற்றும் அவரது குடும்பத்தினரை கடுமையாக தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் அனைவரும் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அப்போது 6 மாதம் கர்ப்பமாக இருந்த மான்யா, மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவத்தை தொடர்ந்து மான்யாவின் தந்தை பிரகாஷ் கெளடா மற்றும் அவரது இரண்டு மகன்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
