“கிரிக்கெட் விளையாடுற ஆசையே போயிடுச்சு… இனிமேல் பேட் எடுக்கவே வேண்டாம்னு முடிவு பண்ணிட்டேன்” – இப்படி ஒரு வார்த்தையை இந்திய அணியின் ஹிட்மேன் ரோகித் சர்மா சொல்லுவார்னு யாராவது நினைச்சுப் பார்த்திருப்பீங்களா?
ஆனால், 2023 ஒருநாள் உலகக்கோப்பை ஃபைனலில் ஆஸ்திரேலியாவிடம் தோற்ற பிறகு, ரோகித் சர்மா எந்த அளவுக்கு மனதளவில் உடைந்து போயிருந்தார் என்பதை அவரே இப்போது வெளிப்படையாகப் பேசியிருக்கிறார்.
ஞாயிற்றுக்கிழமை நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய ரோஹித், அந்தத் தோல்விக்குப் பிறகு தனக்கு ஏற்பட்ட வலியை விவரித்தார். “தொடர்ச்சியாக 9 போட்டிகளில் ஜெயித்துவிட்டு, கோப்பை கைக்கு எட்டும் தூரத்தில் இருந்தபோது, அந்த இறுதிப்போட்டி தோல்வி என்னைப் பிழிந்து எடுத்துவிட்டது. என் உடம்பில் தெம்பே இல்லை… கிரிக்கெட்டே வெறுத்துப்போய்விட்டது. ஓய்வு பெற்றுவிடலாம் என்று கூட நினைத்தேன்” என்று கலங்கக் கூறினார்.
அந்தத் தோல்விக்குப் பிறகு மீண்டு வர அவருக்குப் பல மாதங்கள் ஆனதாம். “நான் 2022-ல் கேப்டன் ஆனதிலிருந்தே, என் ஒரே கனவு அந்த உலகக்கோப்பை தான். அது கிடைக்காதபோது, வாழ்க்கையே முடிந்துவிட்டது போல இருந்தது” என்றார் ரோகித்.
ஆனால், ஒரு உண்மையான வீரன் களத்தை விட்டு ஓட மாட்டான் இல்லையா? தன்னைத்தானே தேற்றிக்கொண்டு, “எனக்கு முன்னாடி இன்னொரு வாய்ப்பு இருக்கு, அதை விடக்கூடாது” என்று வைராக்கியத்தோடு மீண்டும் களத்திற்கு வந்தாராம். அதன் விளைவுதான், அடுத்த சில மாதங்களிலேயே அமெரிக்காவில் நடந்த டி20 உலகக்கோப்பையை வென்று நாட்டிற்குப் பெருமை சேர்த்தது!
இப்போது டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டாலும், ரோகித் சர்மாவுக்கு ஒரே ஒரு ஆசை பாக்கி இருக்கிறதாம். 2027-ல் நடக்கப்போகும் ஒருநாள் உலகக்கோப்பை தான் அது. “கடைசியா ஒரு முறை முயற்சி பண்ணிப் பார்க்கணும்” என்ற வெறியோடு காத்திருக்கிறார் நம்ம ஹிட்மேன்.
தோல்வி ஒரு முடிவல்ல, அது அடுத்த வெற்றிக்கான பாடம் என்பதை ரோகித் சர்மா மீண்டும் நிரூபித்துள்ளார்!
