டில்லி விமான நிலையத்தில் இருந்து இன்று (டிசம்பர் 22) காலை 6.10 மணிக்கு ஏர் இந்தியா விமானம் மும்பையை நோக்கி புறப்பட்டது. விமானம் வானில் பறந்த சில நிமிடங்களிலேயே அதில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.
விமானத்தில் இருந்த இரு இன்ஜின்களில் ஒன்று செயலிழந்ததால், பாதுகாப்பு காரணமாக விமானத்தை மீண்டும் டில்லி விமான நிலையத்தில் தரையிறக்க விமானி முடிவு செய்தார். உடனடியாக விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டு, விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது.
இந்த சம்பவத்தில் பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் உட்பட யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த சம்பவத்திற்கு பயணிகளிடம் ஏர் இந்தியா விமான நிறுவனம் மன்னிப்பு கேட்டுள்ளது. மேலும், விமானம் மீண்டும் புறப்படும் வரை பயணிகளுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் வழங்கப்பட்டதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
