இந்தியாவில் கோடிக்கணக்கான சம்பளதாரர்களின் ஓய்வுக்கால நிதி பாதுகாப்பை உறுதி செய்வதற்காக தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) செயல்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ், ஊழியர் பணியில் இருக்கும் காலம் முழுவதும் அவரும் அவர் பணிபுரியும் நிறுவனமும் மாதந்தோறும் பிஎஃப் கணக்கில் பங்களிப்பு செய்து வருகின்றனர். அந்த பிஎஃப் தொகைக்கு அரசு ஆண்டுதோறும் வட்டி வழங்குகிறது.
இதற்குப் பிறகும், ஓய்வூதியம், காப்பீடு உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை EPFO ஊழியர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் வழங்கி வருகிறது. அவற்றில் மிகவும் முக்கியமான திட்டம் தான் EDLI எனப்படும் தொழிலாளர் வைப்பு தொகை இணைக்கப்பட்ட காப்பீட்டு திட்டம்.
இந்த EDLI திட்டத்தில் சமீபத்தில் EPFO முக்கியமான மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. இதற்கு முன் இருந்த கடுமையான விதிமுறைகள் தற்போது நீக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் லட்சக்கணக்கான ஊழியர்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தினருக்கும் பெரிய நிம்மதி கிடைத்துள்ளது.
EDLI (Employee Deposit Linked Insurance) காப்பீட்டு திட்டத்தில் மிக முக்கியமான மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. இனி, ஒரு ஊழியர் பணியில் இருக்கும் போது இறந்தால், அவருடைய குடும்பத்தினருக்கு குறைந்தபட்சமாக 50,000 ரூபாய் காப்பீட்டு தொகை வழங்கப்படும். ஊழியரின் பிஎஃப் கணக்கில் 50,000 ரூபாய் இருப்பது கட்டாயம் இல்லை. கணக்கில் அதைவிட குறைவான தொகை இருந்தாலும் கூட, குறைந்தபட்ச காப்பீட்டு தொகையாக 50,000 ரூபாய் குடும்பத்தினருக்கு கிடைப்பது உறுதி.
முன்னதாக, பிஎஃப் கணக்கில் 50,000 ரூபாய் இல்லையெனில் இறப்பு பலன் வழங்கப்படாது என்ற விதிமுறை இருந்தது. அந்த விதிமுறையை தற்போது EPFO தளர்த்தியுள்ளது. இதற்கு முன் இந்த காப்பீட்டு பலன் பெற, ஊழியர் தொடர்ந்து 12 மாதங்கள் வேலை செய்திருக்க வேண்டும் என்ற நிபந்தனை இருந்தது. இந்த நிபந்தனையும் தற்போது முழுமையாக நீக்கப்பட்டுள்ளது.
