இந்திய ரிசர்வ் வங்கி (RBI) 2000 ரூபாய் நோட்டுகள் தொடர்பாக ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மக்களிடையே புழக்கத்தில் இருந்த 2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்து தற்போது இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில், இன்னும் எவ்வளவு நோட்டுகள் சந்தையில் மீதமுள்ளன என்பது குறித்த புதிய தகவலை வெளியிட்டுள்ளது.
ரிசர்வ் வங்கியின் தகவலின்படி, 2023 மே 19ஆம் தேதி 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படும் என்று அறிவிக்கப்பட்டபோது, சுமார் ரூ.3.56 லட்சம் கோடி மதிப்புள்ள நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன. தற்போது 2025 அக்டோபர் 31 நிலவரப்படி, அந்த நோட்டுகளில் சுமார் 98.37 சதவீதம் வங்கிகளுக்குத் திரும்பி விட்டதாக RBI தெரிவித்துள்ளது.
இன்னும் உங்களிடம் 2000 ரூபாய் நோட்டுகள் இருந்தால் கவலைப்பட தேவையில்லை. அவற்றை மாற்றிக்கொள்ள இரண்டு வழிகள் உள்ளன.
முதலாவது, ரிசர்வ் வங்கி அலுவலகங்கள். சென்னை உள்ளிட்ட இந்தியா முழுவதும் உள்ள 19 ரிசர்வ் வங்கி மண்டல அலுவலகங்களில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு கவுண்டர்களில் நேரடியாகச் சென்று 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம்.
இரண்டாவது, தபால் நிலையம் (India Post). நீங்கள் நேரடியாக RBI அலுவலகத்திற்குச் செல்ல முடியாவிட்டால், அருகிலுள்ள தபால் நிலையம் மூலம் உங்கள் வங்கி கணக்கு விவரங்களை இணைத்து 2000 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கிக்கு அனுப்பலாம். அதன் பின்னர், அந்தத் தொகை நேரடியாக உங்கள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.
2000 ரூபாய் நோட்டுகளை மாற்றவோ அல்லது வங்கி கணக்கில் செலுத்தவோ விரும்பினால், சில ஆவணங்களை எடுத்துச் செல்ல வேண்டும். அதில் ஆதார் அட்டை அல்லது அரசு அங்கீகரித்த அடையாள அட்டை ஒன்றும், வங்கி கணக்கு விவரங்களைக் காட்டும் பாஸ்புக் நகலும் அடங்கும். மேலும், அங்கு வழங்கப்படும் விண்ணப்பப் படிவத்தை முறையாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
