கோவிட் தொற்று உலகம் முழுவதும் லட்சக்கணக்கான உயிரிழப்புகளை ஏற்படுத்தி பெரும் பாதிப்பை உண்டாக்கியது. கடந்த ஓரிரு ஆண்டுகளாக மட்டுமே மக்கள் அந்தத் தொற்று தாக்கத்திலிருந்து மெதுவாக மீண்டு, நிம்மதியான வாழ்க்கைக்குத் திரும்பி வருகின்றனர்.
இந்நிலையில் கோவிட் போலவே, சிகிச்சையே இல்லாத, மர்மமான தொற்று ஒன்று வேகமாக பரவி வருவதாக ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் இயங்கி வரும், ஜெஃபர்சன் ஹெல்த் தொற்று தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுப் பிரிவின் விஞ்ஞானிகள் இந்த அதிர்ச்சி செய்தியை தெரிவித்திருக்கிறார்கள்.
‘அடினோவைரஸ்’ எனப்படும் நோய்த்தொற்று வேகமாக அதிகரித்து வருவதாகவும், இது காய்ச்சல் அல்லது கோவிட் போன்ற அறிகுறிகளை போல இருந்தாலும், இவற்றுக்கு சிகிச்சை அளிப்பதற்கான வழிகள் குறைவாகவே உள்ளன எனவும் ஜெஃபர்சன் ஹெல்த் தொற்று தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுப் பிரிவின் மருத்துவ இயக்குநர் எரிக் சச்சின்வல்லா கூறியுள்ளார்.
அடினோவைரஸ் தொற்றின் அறிகுறிகள் காய்ச்சல் அல்லது கோவிட் போன்றே இருந்தாலும், இதற்கான சிகிச்சை முறைகள் மிகவும் குறைவாகவே உள்ளன என்று அவர் கூறியுள்ளார். பெரும்பாலான நேரங்களில் இந்த வைரஸ் பாதிப்பு லேசாகவே இருக்கும். ஆனால் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு இந்தத் தொற்று தீவிரமாக மாறும் அபாயம் உள்ளது.
அடினோவைரஸ் தொற்றின் பொதுவான அறிகுறிகளாக மூச்சுத் திணறல், மூக்கு ஒழுகுதல், தொண்டை வலி ஆகியவை காணப்படும். சிலருக்கு வயிற்றுப்போக்கு, கண் சிவத்தல் போன்ற பிரச்சினைகளும் ஏற்படலாம். இந்த வைரஸில் 60-க்கும் மேற்பட்ட வகைகள் இருப்பதால், அறிகுறிகள் நபருக்கு நபர் மாறுபடக்கூடும்.
முதியவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும். காய்ச்சல் 40 டிகிரி செல்சியஸ் அளவுக்கு உயர்ந்தால், அது தீவிரமான நிலை என்பதால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
இந்த வைரஸ் கோவிட் போல பெரிய அளவில் பரவினால், உலகம் மீண்டும் ஒரு பெரும் சுகாதார பேரழிவை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படலாம் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
