Sunday, December 21, 2025

குறையப்போகும் சமையல் எண்ணெய் விலை? புத்தாண்டுக்கு முன்பு மக்களுக்கு வந்த மகிழ்ச்சி செய்தி!

உலகின் மிகப்பெரிய சமையல் எண்ணெய் இறக்குமதி நாடாக இந்தியா திகழ்கிறது. உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்ய, பல்வேறு சமையல் எண்ணெய்கள் வெளிநாடுகளிலிருந்து அதிக அளவில் இறக்குமதி செய்யப்படுகின்றன. குறிப்பாக, பாமாயில் தேவைக்காக இந்தியா பெருமளவு வெளிநாடுகளைச் சார்ந்தே உள்ளது.

இந்நிலையில், உலக சந்தையில் பாமாயில் விலை சரிவடைந்ததை தொடர்ந்து, கடந்த 2025 நவம்பர் மாதத்தில் இந்தியா பாமாயில் இறக்குமதியை அதிகரித்துள்ளது. குறைந்த விலையை சாதகமாக பயன்படுத்திக் கொள்ள சுத்திகரிப்பு நிறுவனங்கள் அதிக அளவில் கொள்முதல் செய்ததால், இறக்குமதி உயர்ந்ததாக கூறப்படுகிறது.

சால்வென்ட் எக்ஸ்ட்ராக்டர்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா அதாவது SEA வெளியிட்டுள்ள தகவலின்படி, 2025 நவம்பர் மாதத்தில் பாமாயில் இறக்குமதி அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில் 5 சதவீதம் அதிகரித்து 6 லட்சத்து 32 ஆயிரத்து 341 மெட்ரிக் டன்களாக உயர்ந்துள்ளது.

அதே நேரத்தில், சோயா எண்ணெய் இறக்குமதி 18 சதவீதத்துக்கும் அதிகமாக குறைந்து 3 லட்சத்து 70 ஆயிரத்து 661 டன்களாக பதிவாகியுள்ளது. மேலும், சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதி 45 சதவீதம் சரிந்து, கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு ஒரு லட்சத்து 42 ஆயிரத்து 953 டன்களாக குறைந்துள்ளது. இதற்கு மத்தியில், ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து 5,000 டன் கனோலா எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சோயா மற்றும் சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதியில் ஏற்பட்ட கடும் சரிவின் காரணமாக, நவம்பர் மாதத்தில் இந்தியாவின் மொத்த சமையல் எண்ணெய் இறக்குமதி முந்தைய மாதத்தை விட 13.3 சதவீதம் குறைந்துள்ளது. தென் அமெரிக்க நாடுகளுக்கு பதிலாக, சீனாவிலிருந்து 69,919 டன் சோயாபீன் எண்ணெய் இந்தியாவுக்கு வந்துள்ளது.

இந்தோனேசியா மற்றும் மலேசியாவிலிருந்து பாமாயிலும், அர்ஜென்டினா, பிரேசில், ரஷ்யா, உக்ரைனிலிருந்து சோயா மற்றும் சூரியகாந்தி எண்ணெய்களும் இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படுகின்றன. தற்போது, பாமாயில் விலை சோயா எண்ணெயை விட டன்னுக்கு 100 டாலரும், சூரியகாந்தி எண்ணெயை விட 200 டாலரும் குறைவாக உள்ளது. இதனால், டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களுக்கு இந்திய வாங்குபவர்கள் பாமாயிலை அதிகம் தேர்வு செய்யத் தொடங்கியுள்ளனர்.

உற்பத்தி நாடுகளில் விளைச்சல் அதிகரித்ததும், சாதகமான வானிலை நிலவுவதும் பாமாயில் விநியோகத்தை உயர்த்தியுள்ளது. இருப்புகளை குறைக்கும் நோக்கில் ஏற்றுமதியை ஊக்குவிப்பதால், உலக சந்தையில் விலை சரிந்துள்ளது. இதன் தாக்கமாக, விரைவில் இந்திய சந்தையிலும் சமையல் எண்ணெய் விலைகள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related News

Latest News