ஒடிசா மாநிலம் சம்பல்பூரில் உள்ள ஒரு விமான ஓடுதளம் தேர்வு மையமாக மாற்றப்பட்டது.
விமான ஓடுதளத்தில் ஊர்க்காவல் படை பணியிடங்களுக்கான தேர்வு நடைபெற்றது. இதில் சுமார் 8,000 பேர் விண்ணப்பித்து தேர்வில் பங்கேற்றனர்.
இது குறித்து அதிகாரிகள் தெரிவித்ததாவது, விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருந்ததால், பல சவால்கள் ஏற்பட்டதாகவும் அந்த சவால்களை சமாளிக்கும் வகையில், அனைத்து விண்ணப்பதாரர்களும் எந்த இடையூறும் இல்லாமல் அமர்ந்து தேர்வு எழுதக்கூடியதாக விமான ஓடுபாதையில் தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டதாக அவர் விளக்கினார்.
தேர்வை சுமூகமாக நடத்த போதுமான எண்ணிக்கையிலான அதிகாரிகள் பணியமர்த்தப்பட்டிருந்தனர். அதே நேரத்தில், தேர்வின்போது வேட்பாளர்களை கண்காணிக்க ட்ரோன்களும் பயன்படுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
விண்ணப்பதாரர்கள் 90 நிமிடங்களில், இரண்டு பகுதிகளாக மொத்தம் 50 மதிப்பெண்களுக்கு எழுத்துத் தேர்வு எழுதினர். இந்த எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் உடல் தகுதித் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
