Sunday, December 21, 2025

டிசம்பர் 31 தான் கடைசி தேதி! கண்டிப்பா செய்துடுங்க., இல்லைனா ஆயிரக்கணக்கில் அபராதம்.!

டிசம்பர் மாதம் முடிவுக்கு வருவதால், புத்தாண்டுக்கு முன் நிறைவேற்ற வேண்டிய முக்கிய நிதி தொடர்பான பணிகள் கவனம் பெறத் தொடங்கியுள்ளன. குறிப்பாக, டிசம்பர் 31 என்பது பல நிதி நடவடிக்கைகளுக்கான கடைசி தேதியாக இருப்பதால், இந்த நாளை தவறவிட்டால் அபராதம், கூடுதல் வட்டி மற்றும் தேவையற்ற சட்ட சிக்கல்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் பொதுமக்கள் இந்நேரத்தில் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

2025ம் ஆண்டின் இறுதி மாதமான டிசம்பர் தற்போது கடைசி கட்டத்தை எட்டியுள்ளது. இன்று டிசம்பர் 19 என்பதால், வருட முடிவிற்கு இன்னும் 11 நாட்களே உள்ளன. இந்த குறுகிய காலத்தில் சில முக்கிய நிதி நடவடிக்கைகளை மேற்கொள்ள தவறினால், அதன் தாக்கம் நேரடியாக உங்கள் பொருளாதார நிலையை பாதிக்கும். குறிப்பாக, வருமானவரி தொடர்பான விஷயங்களில் அலட்சியம் காட்டுவது பெரிய பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.

2024–25 நிதியாண்டுக்கான வருமானவரி அறிக்கையை இதுவரை தாக்கல் செய்யாதவர்கள், வரும் டிசம்பர் 31, 2025க்குள் கட்டாயமாக ஐடிஆர் தாக்கல் செய்ய வேண்டும். இந்த தேதிக்குப் பிறகு வருமானவரி அறிக்கையை சமர்ப்பிக்க முடியாது. தாமதமாக தாக்கல் செய்தால், ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்திற்கு குறைவாக இருந்தால் ரூ.1,000 அபராதமும், ரூ.5 லட்சம் அல்லது அதற்கு மேல் இருந்தால் ரூ.5,000 அபராதமும் விதிக்கப்படும்.

டிசம்பர் 31க்குள் தாமத ஐடிஆர் கூட தாக்கல் செய்யப்படவில்லை என்றால், வருமானவரி ரீஃபண்ட் கிடைப்பதில் தாமதம் அல்லது முற்றிலும் நிறுத்தப்பட வாய்ப்பு உள்ளது. மேலும், வருமானவரி சட்டத்தின் கீழ் அபராதம் மற்றும் வட்டி விதிக்கப்படுவதால், மொத்த வரி சுமை அதிகரிக்கும்.

தொடர்ச்சியாக ஐடிஆர் தாக்கல் செய்யாமல் இருப்பது, உங்கள் டாக்ஸ் புரொஃபைலை பலவீனப்படுத்தும். இதனால் வங்கி கடன், வீட்டு கடன், கிரெடிட் கார்டு மற்றும் விசா விண்ணப்பங்களில் சிக்கல்கள் ஏற்படலாம். மேலும், வருமானவரி துறையின் கண்காணிப்பும் அதிகரித்து நோட்டீஸ் வரும் வாய்ப்பும் உள்ளது.

இதனிடையே, 2024 அக்டோபர் 1க்கு முன் ஆதார் பெற்றவர்கள், பான் எண்ணை இன்னும் ஆதாருடன் இணைக்கவில்லை என்றால், டிசம்பர் 31, 2025க்குள் அவசியமாக இணைக்க வேண்டும். தவறினால், பான் செயலிழக்கும் அபாயம் உள்ளது. இதனால் வங்கி பரிவர்த்தனை, முதலீடு மற்றும் ஐடிஆர் தாக்கல் போன்ற செயல்பாடுகள் பாதிக்கப்படும்.

ஆன்லைனில் வருமானவரி தாக்கல் செய்ய இணையதளத்தின் மூலம் பான், ஆதார் எண் மற்றும் மொபைலுக்கு வரும் OTP பயன்படுத்தி சில நிமிடங்களில் இந்த இணைப்பை செய்யலாம். அபராதம் இருந்தால் அதை ஆன்லைனிலேயே செலுத்தும் வசதியும் உள்ளது. இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இந்த முக்கிய நிதி பணிகளை தாமதிக்காமல் உடனே நிறைவேற்றுவது அவசியம்.

Related News

Latest News