Saturday, December 20, 2025

தெருவில் விளையாடிய சிறுவனை எட்டி உதைத்து விட்டு சென்ற நபர்

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள தியாகராஜநகர் பகுதியில், நீவ் ஜெயின், என்ற ஐந்து வயது சிறுவன் தனது பாட்டி வீட்டிற்கு அருகில் மற்ற குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அப்பகுதியில் வசிக்கும் ரஞ்சன் என்ற நபர் திடீரென வந்து, எந்தவித காரணமும் இல்லாமல் குழந்தையை தாக்கிவிட்டு அசால்ட்டாக நடந்து சென்றுள்ளார். இந்த சம்பவம் டிசம்பர் 14 அன்று மதியம் சுமார் 1.15 மணியளவில் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்திற்குப் பிறகு, குடும்பத்தினர் உடனடியாக குழந்தையை மருத்துவ சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். பின்னர், பனசங்கரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

ரஞ்சன் என்ற நபர் சிறுவனை பலமாக உதைத்ததால், சிறுவன் தரையில் விழுந்தான். இந்த தாக்குதலால், குழந்தையின் புருவத்திற்கு மேலே காயம் ஏற்பட்டு இரத்தம் வடிந்ததுடன், கைகள் மற்றும் கால்களில் சிராய்ப்புகளும் ஏற்பட்டது என சிறுவனின் தாயார் தீபிகா ஜெயின் கூறினார்.

ரஞ்சன், அந்த பகுதியில் மக்களை தாக்குவது மற்றும் துஷ்பிரயோகம் செய்வது போன்ற செயல்களில் ஈடுபடுவதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து ரஞ்சன் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. ரஞ்சன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

Related News

Latest News