கர்நாடக மாநிலம், பெங்களூரு ராமமூர்த்திநகர் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் சதீஸ். அதே ராமமூர்த்திநகரில் வசித்து வருபவர் சஞ்சனா என்ற வனஜா(வயது 38). இவர், காங்கிரஸ் பிரமுகர் ஆவார். சமீபத்தில் சஞ்சனாவுக்கும், இன்ஸ்பெக்டர் சதீசுக்கும் இடையே அறிமுகம் ஏற்பட்டது.
அப்போது உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும், உங்களை காதலிக்கிறேன், நீங்களும் என்னை காதலிக்க வேண்டும் என்று போனில் சஞ்சனா கூறியுள்ளார். இவ்வாறு 11 செல்போன் எண்களில் இருந்து இன்ஸ்பெக்டர் சதீசை தொடர்பு கொண்டு தன்னை காதலிக்கும்படி சஞ்சனா தொல்லை கொடுத்துள்ளார்.
ஒரு கட்டத்தில் தன்னை காதலிக்க மறுத்தால் தற்கொலை செய்து கொள்வேன் என்று ரத்தத்தால் கடிதம் எழுதி மிரட்டல் விடுத்தார். இதையடுத்து போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்து தொல்லை கொடுத்தல் மற்றும் தற்கொலை மிரட்டல் விடுத்ததாக கூறி சஞ்சனா மீது வழக்குப்பதிந்து அவரை போலீசார் கைது செய்தனர்.
காதல் தொல்லை கொடுத்த சஞ்சனாவுக்கு ஏற்கனவே திருமணமாகி கணவரை விட்டு பிரிந்துள்ளார். சதீசுக்கும் திருமணமாகி மனைவி குழந்தைகள் உள்ளனர்.
