செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண்ணிற்கு ஊசி போட்டதால் உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றச்சாட்டு முன் வைத்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அடுத்த காவனூர் பகுதியை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன். இவருக்கு திருமணம் ஆகி மீனாட்சி (25) என்கிற மனைவி உள்ளார். மீனாட்சி கர்ப்பமாக இருந்ததால் பிரசவத்திற்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த டிசம்பர் ஒன்றாம் தேதி அன்று அனுமதிக்கப்பட்டார்.
மீனாட்சியின் உடலில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பதாகவும், அதனால் பிரசவத்திற்கு தாமதமாவதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். பின்னர் கடந்த எட்டாம் தேதி மீனாட்சிக்கு அறுவை சிகிச்சையின் மூலம் பெண் குழந்தை பிறந்தது. அறுவை சிகிச்சை செய்யப்பட்ட இடத்தில் தையல் போடப்பட்ட இடத்தில் கிருமி தொற்று இருப்பதாக கூறி நோய் எதிர்ப்பு மருந்தை மருத்துவர்கள் செலுத்தியுள்ளனர்.
தொடர்ந்து மீனாட்சிக்கு நோய் எதிர்ப்பு மருந்து செலுத்தப்பட்ட நிலையில் திடீரென மீனாட்சி உயிர் இழந்தார். இது குறித்து மருத்துவர்களிடம் கேட்டபோது முறையான பதில் அளிக்கவில்லை எனவும், இறப்பிற்கான காரணம் குறித்து தங்களுக்கு தெரியவில்லை என அலட்சியமாக மருத்துவர்கள் கூறுவதாக உறவினர்கள் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர்.
மீனாட்சியின் உடல் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனை பிணைவரையில் பிரேத பரிசோதனை முடிந்த பின்னர், மீனாட்சி என் உடலை வாங்கிய உறவினர்கள் சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீதும் மருத்துவமனை நிர்வாகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
