Wednesday, December 17, 2025

ரொம்ப கம்மி வட்டியில் ரூ.10 லட்சம் வரை கடன்.! அள்ளி கொடுக்கும் தமிழக அரசு

தமிழக அரசு சார்பில் மக்கள் பொருளாதார முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்டு பல்வேறு கடன் உதவி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக சொந்த தொழில் தொடங்கவும், கல்வி வளர்ச்சிக்காகவும் பல துறைகளின் கீழ் குறைந்த வட்டியில் கடன் வழங்கும் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

அந்த வகையில், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் கைவினைக் கலைஞர்களுக்கான கடன் உதவி திட்டம் குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதுகுறித்து திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் சுகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் அதாவது TAMCO மூலம் ‘விராசாத் கைவினைக் கலைஞர் கடன் திட்டம்’ செயல்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் தையல், பாய் முடைதல், கூடை பின்னுதல், தறி நெய்தல், ஆரி வேலை, எம்பிராய்டரி, மரச்சாமான்கள் தயாரித்தல் உள்ளிட்ட பல்வேறு கைவினைத் தொழில்களில் ஈடுபட்டு வரும் சிறுபான்மையினக் கலைஞர்களுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படுகிறது.

திட்டம்-1ன் கீழ், நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் வசிக்கும், ஆண்டு குடும்ப வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் உள்ள சிறுபான்மையினக் கைவினைக் கலைஞர்களுக்கு அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை கடன் வழங்கப்படும். இதில் ஆண் பயனாளிகளுக்கு 5 சதவீதமும், பெண் பயனாளிகளுக்கு 4 சதவீதமும் ஆண்டு வட்டி விகிதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் திட்டம்-2ன் கீழ், ஆண்டு குடும்ப வருமானம் ரூ.8 லட்சத்திற்குள் உள்ளவர்களுக்கு ரூ.10 லட்சம் வரை கடன் வழங்கப்படும். இதில் ஆண் பயனாளிகளுக்கு 6 சதவீதமும், பெண் பயனாளிகளுக்கு 5 சதவீதமும் வட்டி விதிக்கப்படும். இந்த இரண்டு திட்டங்களின் கீழ் பெறப்படும் கடன் தொகையை 5 ஆண்டுகளுக்குள் திருப்பிச் செலுத்த வேண்டும்.

திருநெல்வேலி மாவட்டத்தில் வசிக்கும் கிறித்துவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின் சமூகங்களைச் சேர்ந்த கைவினைக் கலைஞர்கள், இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற (https://tamco.tn.gov.in/) இணையதளம் மூலம் அல்லது மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை நேரில் அணுகி விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம்.

Related News

Latest News