சென்னை, அம்பத்தூர் மேனாம்பேடு பகுதியில் உள்ள சாலையில் பள்ளம் ஏற்பட்டதால் சரக்கு லாரி ஒன்று சிக்கிக்கொண்டது.
அம்பத்தூர் பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளுக்கு சரக்குகளை ஏற்றி வந்த லாரியின் சக்கரம் பள்ளத்தில் சிக்கிக் கொண்டதால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலானது ஏற்பட்டது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் லாரியை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி லாரியில் இருந்த ரேஷன் பொருட்களை அருகே உள்ள ரேஷன் கடைக்கு மாற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
கருக்கு சாலை பகுதியில் கடந்த மூன்று மாதங்களுக்குள் பலமுறை பள்ளம் ஏற்பட்டு இவ்வாறு நடப்பது தொடர்கதையாக உள்ளது. இதனால் மாநகராட்சி நிர்வாகம் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. எனவே இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கோரிக்கையை முன் வைத்துள்ளனர்.
