Monday, January 26, 2026

S.I.R படிவத்தில் தவறான தகவல் கொடுத்ததாக குடும்பத்தினர் மீது வழக்குப்பதிவு

S.I.R படிவத்தில் தவறான தகவல் கொடுத்ததாக, நாட்டிலேயே முதல்முறையாக உத்தரபிரதேசத்தை சேர்ந்த குடும்பத்தினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பீகாரை தொடர்ந்து, தமிழகம், கேரளா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட 9 மாநிலங்கள், புதுச்சேரி உள்ளிட்ட 3 யூனியன் பிரதேசங்களில் S.I.R பணி கடந்த நவம்பர் 4-ம் தேதி தொடங்கியது. S.I.R படிவங்களில் வாக்காளர்கள் பூர்த்தி செய்துள்ள விவரங்களை வாக்குச்சாவடிநிலை அலுவலர்கள் சரிபார்த்து இணையத்தில் பதிவேற்றம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், S.I.R படிவத்தில் தவறான தகவல் கொடுத்ததாக, உத்தர பிரதேச மாநிலம் ராம்பூரை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். B.N.S மற்றும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 31-வது பிரிவின்கீழ் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ராம்பூரின் ஜவஹர் நகரில் வசிப்பவர் நூர்ஜஹான். இவர் வெளிநாட்டில் வசிக்கும் தனது மகன்கள் ஆமிர் கான், டேனிஷ் கான் சார்பாக தனது கையெழுத்துடன் S.I.R படிவத்தை சமர்ப்பித்துள்ளார். படிவங்களை BLO சரிபார்த்த போது, ஆமிர் கான், டேனிஷ் கான் ஆகிய இருவரும் நீண்ட காலமாக வெளிநாட்டில் வசிப்பது தெரியவந்தது. ஆனால், அவர்கள் இந்தியாவில் வசிப்பதாக நூர்ஜஹான் தவறான தகவல் தந்துள்ளார். இது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 31-வது பிரிவை மீறும் செயல் என்றும் வேண்டுமென்றே உண்மையை மறைத்தது B.N.S சட்டத்தின்படி தண்டனைக்குரிய குற்றம் எனவும் முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணைய விதிமுறைகளின்படி S.I.Rபணி வெளிப்படையாக நடைபெறுகிறது என்றும் படிவத்தில் தவறான தகவல் கொடுப்பது, உண்மையை மறைப்பது விதிகளை மீறிய செயல் ன்று ராம்பூர் மாவட்ட ஆட்சியர் அஜய் குமார் திவேதி கூறியுள்ளார்.

Related News

Latest News