அதிமுக-வுக்கு மீண்டும் மக்கள் வாய்ப்பு கொடுத்தால், தமிழ்நாட்டை பாஜக-வுக்கு விற்றுவிடுவார்கள் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே சிந்தாமணியில், திமுக சார்பில் 17 லட்சம் ரூபாய் செலவில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் வெண்கல சிலை அமைக்கப்பட்டுள்ளது. 8 அடி உயரம் உள்ள இந்த சிலையை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்நிகழ்வில், அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் பொன்முடி, விக்கிரவாண்டி எம்.எல்.ஏ சிவா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
விழா மேடையில் பேசிய துணை முதலமைச்சர், மதத்தை வைத்து அரசியல் செய்து தமிழகத்தில் கால் பதிக்கலாம் என பாஜக முயற்சிக்கிறது, திமுக-வினர் அதற்கு இடம் கொடுக்கக்கூடாது என்று கூறினார். பாஜக-வின் அடிமையாக அதிமுக செயல்பட்டு கொண்டிருப்பதாகவும், மீண்டும் வாய்ப்பு கிடைத்தால் தமிழ்நாட்டை பாஜக-விடம் விற்றுவிடுவார்கள் எனவும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
