Sunday, December 7, 2025

புதினை சொக்க வைத்த இந்தியாவின் பரிசுகள்! லிஸ்ட் பெருசா போகுதே!

இந்தியாவுக்கு வந்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு, இந்தியப் பாரம்பரியத்தையும் இரண்டு நாடுகளின் உறுதியான நட்புறவையும் பிரதிபலிக்கும் முக்கியமான பல பரிசுகள் வழங்கப்பட்டன. இந்திய கலாசாரம், கைவினை திறன் மற்றும் ஆன்மீகத்தை வெளிப்படுத்தும் வகையில் இவை கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தன.

முதலாவது பரிசாக, பிரம்மபுத்திரா நதிக்கரையில் விளையும் உயர்தர அசாம் கருப்பு தேயிலை புதினுக்கு அளிக்கப்பட்டது. இதனுடன் பொருந்தும் வகையில், முர்ஷிதாபாத் நுணுக்கக் கைவினைக் கலைஞர்களால் வடிவமைக்கப்பட்ட அழகிய வெள்ளி தேநீர் கோப்பைத் தொகுப்பையும் மோடி வழங்கினார். இந்தச் செட், இந்திய-ரஷ்ய நாடுகளுக்கிடையேயான நீண்டகால கலாசார நெருக்கத்தை குறிக்கும் வகையில் சிறப்பு பெற்றதாகக் கூறப்படுகிறது.

மேலும், மகாராஷ்டிராவின் உலோகக் கைவினை பாரம்பரியத்தை சுட்டிக்காட்டும் வெள்ளிக் குதிரை சிலை புதினுக்கு பரிசளிக்கப்பட்டது. அதனுடன், ஆக்ராவின் புகழ்பெற்ற பளிங்கு கலைக்காரர்களால் உருவாக்கப்பட்ட, அரிய கல் பதிப்புகளும் ரத்தினங்களும் பயன்பட்ட செஸ் செட்டும் மோடி வழங்கிய முக்கியப் பொருட்களில் ஒன்று. இது நாட்டின் கைவினை நுட்பத்தையும் அழகிய அலங்கார பாணியையும் வெளிப்படுத்தும் தன்மை கொண்டது.

அதேபோல், ‘சிவப்பு தங்கம்’ என அழைக்கப்படும் காஷ்மீர் குங்குமமும் இரண்டு வெள்ளிக் கின்னங்களில் அலங்கரித்து புதினுக்கு அளிக்கப்பட்டது. உயர்தரமான இந்த குங்குமம் காஷ்மீரின் பாரம்பரியத்தையும் செழுமையையும் பிரதிபலிக்கிறது.

பரிசுகளின் பட்டியலில் மிக முக்கியமான ஒன்று, ரஷ்ய மொழிக்கு மொழிபெயர்க்கப்பட்ட பகவத் கீதை. இந்திய இலக்கியத்தை உலக நாடுகளில் அறிமுகப்படுத்தும் முயற்சியின் ஒரு தொடர்ச்சியாக இதை மோடி வழங்கியுள்ளார் என்று கூறப்படுகிறது. இந்த பரிசுத் தொகுப்பு முழுவதும், இந்தியாவின் பாரம்பரிய செல்வத்தையும் இருதரப்புத் தொடர்பின் வலிமையையும் வலியுறுத்துவதாக இருக்கிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News