பாட்டாளி மக்கள் கட்சியின் தந்தை, மகன் இடையேயான பிரச்சினையால் தற்போது அக்கட்சியின் சின்னம் முடக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. பாமகவில் இருந்து அன்புமணி நீக்கப்பட்டதாக ராமதாஸ் கூறிய நிலையில், பாமகவின் தலைவர் நான்தான் என அன்புமணி கூறி வந்தார்.
இரு தரப்புக்கும் இடையே மோதல் வலுத்து வந்த நிலையில் இந்த விவகாரம் தேர்தல் ஆணையத்துக்குச் சென்றது. அதில், ஆவணங்களின்படி அன்புமணிதான் பாமகவின் தலைவர் என்று தேர்தல் ஆணையம் கூறியது.
இதையடுத்து தன்னுடைய பாட்டாளி மக்கள் கட்சியை அன்புமணி அபகரித்ததாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் ராமதாஸ் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இதில் ராமதாஸ் தரப்புக்கும் அன்புமணி தரப்புக்கும் இடையே காரசார விவாதம் நடைபெற்றது.
இந்த விசாரணையில் தேர்தல் ஆணையம் தரப்பு, “எங்களுக்கு கிடைத்த ஆவணங்களின்படி அன்புமணி தலைவர் என்று கூறினோம். கட்சியின் தலைவர் விவகாரத்தில் நாங்கள் எந்த தனிப்பட்ட முடிவையும் எடுப்பதில்லை. அவர்கள் உரிமையியல் நீதிமன்றத்தை அணுகி தீர்வு காணலாம். தேர்தல் வரை இரு தரப்புக்கும் இடையே இதே நிலை நீடித்தால் மாம்பழம் சின்னம் முடக்கப்படும் வாய்ப்பு இருப்பதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
